மம்முட்டியின் தலசேரி மட்டன் பிரியாணி
தல - சேரி என்பதால் தலைக்கறியை சேர்த்து செய்த மட்டன் பிரியாணி என்று நாக்கில் எச்சில் ஊற வாய்ப்புள்ளது. தலசேரி என்பது கேரளாவில் உள்ள ஓர் இடம். பிரியாணிக்கு பெயர் பெற்றது. நம்மூர் ஆம்பூர் மாதிரி. இங்கு ஆம்பூர் பிரியாணி என்றால் கேரளாவில் தலசேரி மட்டன் பிரியாணி.
பொதுவாக மலையாள நடிகர்கள் அனைவருமே சாப்பாட்டு ப்ரியர்கள். அவர்களின் செல்ல தொப்பையே இதற்கு சரித்திர சான்று. சிலர் நன்றாக சமைக்கவும் செய்வார்கள். மங்கலீஷ் படப்பிடிப்பின் போது மம்முட்டி படயூனிட்டுக்கு மொத்தமாக சேர்த்து தலசேரி மட்டன் பிரியாணி சமைத்தார். இங்கு அஜீத் ஏற்கனவே இப்படி பிரியாணி சமைத்து பரிமாறியிருக்கிறார். தமிழகத்தில் பிரியாணி சமைத்தது தல அஜீத் என்றால், மம்முட்டி கேரளாவில் செய்தது 'தல' சேரி மட்டன் பிரியாணி. இரண்டிலுமே தல இருப்பது எதேச்சையான ஒற்றுமை.
மங்கலீஷ் படத்தில் மம்முட்டி மீன் வியாபாரி. ஆங்கில மோகத்தில் மலையாளத்துடன் ஆங்கிலம் கலந்து பேசுகிறவர். கேரளாவுக்கு சுற்றுலா வரும் நெதர்லாந்த்தைச் சேர்ந்த இளம் பெண்ணை மம்முட்டி சந்தித்த பிறகு நடக்கும் விஷயங்கள்தான் மங்கலீஷின் கதை. மம்முட்டி வட்டார வழக்கில் பேசி நடித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. உதாரணம் ராஜமாணிக்கம். பல படங்கள் ரொம்ப சுமாராகவும் இருந்துள்ளன. உதாரணம் துருப்பு குலான். மங்கலீஷில் ராஜமாணிக்கத்தில் பேசிய திருவனந்தபுரம் வட்டார வழக்கில் பேசுகிறார் என்று தகவல். ஆனால் படக்குழு இந்தத் தகவலை மறுத்துள்ளது.
0 comments
Post a Comment