Pages

Wednesday, June 18, 2014

ஈ. வெ. ராமசாமி

E-V-Ramasamyபெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 17, 1879
இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)
இறப்பு: டிசம்பர் 24, 1973
பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு:
ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.
ஆரம்ப வாழ்க்கை:
தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின்  வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம்:
காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு  வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.
வைக்கம் போராட்டம்:
பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.
இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.
பெரியாரின் திராவிட கழகம்:
பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:
பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,  மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948  ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இறுதிகாலம்:
இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973  டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.
புனைபெயர்கள்:
இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.
இறப்பு:
‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.
பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
காலவரிசை:
1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
1898 – நாகம்மையாரை மணந்தார்.
1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.

0 comments

அம்ருதானந்தமயி

Amritanandamayiகேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் மற்றும் ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை புரிந்து ஒரு ஆன்மீகவாதியாகவும், சமூக சேவையாளராகவும் வாழ்ந்து வரும் அம்ருதானந்தமயி தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 27, 1953
இடம்: அமிர்தபுரி (கொல்லம் மாவட்டம்), கேரளா
பணி: சமூக சேவையாளர், ஆன்மீகவாதி
நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு
சமூக சேவையாளரான அம்ருதானந்தமயி அவர்கள், 1953  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலமான கொல்லம் மாவட்டத்திலுள்ள அமிர்தபுரி என்று அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் சுகுனாதனந்தனுக்கும், தமயந்தியம்மையாருக்கும் மூன்றாவது மகளாக ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாகவும், தன்னுடைய சகோதரிகளை கவனித்துக்கொள்ளவும், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட அம்ருதானந்தமயி தேவி அவர்கள், தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு கடவுள் பக்தி கொண்டாவராகவும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் வளர்ந்தார். கடவுள் கிருஷ்ணா மீது அதிக பக்தி கொண்ட அவர் கிருஷ்ணரை தரிசித்து பாடல்களும் பாடியுள்ளார்.
ஆன்மிகம் மற்றும் சமூக சேவையாளராக அம்ருதானந்தமயின் பயணம்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக வளர்ந்த அம்ருதானந்தமயி அவர்கள், தன்னுடைய இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண் என யாராக இருந்தாலும் ஒரு தாயைப்போலக் கட்டியணைத்து ஆறுதல் கூறுவார். அவருடைய பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்ய பலமுயற்சிகள் எடுத்தபோதிலும், ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், 1979 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகில் கொல்லம் என்ற இடத்தில் “மாதா அம்ருதானந்தமயி மடம்” என்ற ஒன்றை நிறுவி தன்னுடைய சேவையை தொடர்ந்தார். அம்ருதானந்தமயி அவர்கள், ‘பக்தர்களை கட்டி அரவணைத்து ஒரு தாயை போல ஆறுதல் கூரி தரிசனம் தருவதால்’ அனைவரளாலும் “அரவணைக்கும் அன்னை” என அழைக்கப்படுகிறார். அவ்வாறு அரவணைக்கும் பொழுது ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியை பக்தர்கள் பெறுவதாக கூறுகின்றனர். இதனால் மக்கள் அவரிடம் வந்து அவர்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும் கூறி மனநிம்மதி அடைகின்றனர். அம்ருதானந்தமயி அவர்கள், சுமார் 1000க்கும் மேற்பட்ட பஜனைகளையும், (பக்தி பாடல்கள்) முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடக்கூடியவர். 1981 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இவர் உலகமுழுவதும் பல இடங்களில் ஆன்மீக உரையாற்றியுள்ளார். 1993ல் உலக சமய நாடாளுமற்றத்தில், இந்து மத நம்பிக்கைத் தலைவராக சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
அம்ருதானந்தமயி அறக்கட்டளைகள்
அம்ருதானந்தமயி அவர்கள், அறக்கட்டளை மூலம் பரவலாக உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் ஆன்மிகம் போன்ற துறைகளில் ஏழை, எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்.
அம்ருதானந்தமயி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள்
அமிர்தா விஸ்வா வித்யாபீடம், அமிர்தா கணினி தொழில்நுட்ப நிறுவனம், எம்.எ.எம் தொழிற்துறை பயிற்சிமையம், அமிர்தா சமஸ்கிருத மேல்நிலைப்பள்ளி, அமிர்தா வித்யாலயம், அமிர்தா வித்யபீடம் மற்றும் வேதாந்த வித்யாபீடம்.
மருத்துவம்
அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அம்ரிதக்ரிப அறக்கட்டளை மருத்துவமனை, அம்ரிதாபுரி, அம்ருதா ஆயுர்வேத மருத்துவ கழகம், அம்ருதா ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம், கொல்லம். அமிர்தா கண் மருத்துவமனைகள்.
மற்ற பிரிவுகளும், திட்டங்களும்
அமிர்தா குட்டீரம் – ஏழை மற்றும் ஊனமுற்றவர்களுக்கான வீட்டு வசதி திட்டம். அமிர்தா நிதி – விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம். அமிர்தா நிகேதனம் – அனாதை இல்லை. அம்ரிதா கிருபா சாகர் – புற்றுநோயளிக்கான நலவாழ்வு திட்டம். அம்ரிதா அன்பு இல்லம் – ஆதரவற்ற முதியோருக்கான இல்லம். திருவந்தபுரம் அம்ரிதா பெண்கள் புனர்வாழ்வு மையம், திருச்சி அம்ரிதா பேச்சு மற்றும் கேட்கும் மேம்பாட்டுப் பள்ளி, அம்ரிதா இலவச உணவு திட்டம்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
  • 1993 – இந்து மத மறுமலர்ச்சி விருது
  • 1998 – ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் ஷேர் சர்வதேச மனிதாபிமான விருது சிகாகோவிலிருந்து வழங்கப்பட்டது.
  • 2002 – கர்மா யோகி விருது வழங்கப்பட்டது.
  • 2005 – மகாவீர் மகாத்மா விருது வழங்கப்பட்டது.
  • 2005 – சென்ட்டேன்னரி லெஜெண்டரி அவார்ட்ஸ் ஆஃப் த இன்டர்நேஷனல் ரோடரியன்ஸ்
  • 2006 – ஜேம்ஸ் பார்க்ஸ் மோர்டன் இடைச்சமயம் விருது.
  • 2010 – நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம், இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
அம்ருதானந்தமயி மடம் கிட்டதட்ட 12 கோயில்கள், 33 க்கும் மேற்பட்ட கல்விநிருவனங்கள் என தொடங்கி வீடற்ற மக்களுக்கு வீடுகள் கட்டுதல், சுனாமி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பாதிப்புகளால் அவதிப்படும் மக்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது.
0 comments

Monday, June 16, 2014

எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார்

S-Srinivasa-Iyengarசேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் புகழ்பெற்ற இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாண வழக்கறிஞராகவும், சட்டமன்ற உறுப்பினராகவுகம், “இந்திய தேசிய காங்கிரஸ்” மற்றும் “சுயராஜ்ஜிய கட்சியின்” தலைவராகவும் பணியாற்றிய அவர், ‘தென்னாட்டு சிங்கம்’ என அனைவராலும் போற்றப்படுகிறார். வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று பல பணிகளை சிறப்பாக செய்த எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 11, 1874
பிறப்பிடம்: ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: வழக்கறிஞர், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி
இறப்பு: மே 19, 1941
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் என அழைக்கப்படும் சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1874  ஆம் ஆண்டு செப்டம்பர் 11  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மதுரையில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னர் சென்னையிலுள்ள “ப்ரெசிடென்சி கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று, மிக விரைவில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். பிறகு 1912ல், மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 1916 ஆம் ஆண்டு மிக இளம் வயதிலேயே சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுப்பேற்றார். மேலும் 1912 முதல் 1916 வரை சென்னை மாகாண செனட் உறுப்பினராகவும் பணியாற்றினார். பின்னர் 1916ல் “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராகவும் பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீநிவாச அய்யங்கார் 1920 வரை பணியாற்றினார்.
விடுதலைப் போரில் அவரின் பங்கு
1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்தக் கொடூரமான படுகொலை, எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய பதவியை ராஜனாமா செய்துவிட்டு, 1920 ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணையவும் செய்தது. மகாத்மா காந்தியின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர்,  பிரித்தானிய இந்தியாவில் காலனி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரசால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.
அரசியல் வாழ்க்கை
1923 ஆம் ஆண்டு காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் காங்கிரஸில் இருந்தபடியே ஜவர்ஹலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்கள் தலைமையில் “சுயராஜ்யக் கட்சியினை” தொடங்கினார். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஸ்ரீநிவாச அய்யங்கார் நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை மாகாண “சுயராஜ்யக் கட்சியின்” தலைவராக பொறுப்பேற்றார். இக்கட்சி 1926 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாண்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்தது. பிறகு 1928 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த சைமன் குழுவை (சைமன் குழு என்பது 1919 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று கண்டறிய ஆங்கில ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு) சுயராஜ்யக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் புறக்கணிக்க முடிவுசெய்தது. இது மட்டுமல்லாமல், அதனை எதிர்த்துப் போராட்டங்களும் நடத்தினர். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை நீக்குவதற்காக 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராகவும் சேர்ந்தார்.
இறுதிகாலம்
1930 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸில் பலபேர் “டொமினியன் அந்தஸ்து” (டொமினியன் அந்தஸ்து என்பது ஆங்கில மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுயாட்சி ஆகும்) பெற்றால் போதும் என எண்ணினார். ஆனால் முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என கொள்கையாகக் கொண்ட எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் 1930 ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இறப்பு
இறுதிவரை சுயராஜ்யமே மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்த சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1941 ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் தன்னுடைய 66 வது வயதில் சென்னையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.
காலவரிசை
1874 – செப்டம்பர் 11 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் பிறந்தார்.
1912 – “மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக” நியமிக்கப்பட்டார்.
1916 – சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுபேற்றார்.
1912-16 – சென்னை மாகாண செனட் உறுப்பினராக பணியாற்றினார்.
1916-20 – “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராக பணியாற்றினார்.
1920 – இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
1928 – இந்தியா வந்த “சைமன் குழுவிற்கு” எதிர்ப்புத் தெரிவித்தார்.
1928 – “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார்.
1941 – மே 19ஆம் நாள் 66 வது வயதில் சென்னையில் காலமானார்.
0 comments

ராணி லக்ஷ்மி பாய்

Rani-Lakshmi-Baiராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 19 நவம்பர் 1828
பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா 
இறப்பு: 18 ஜூன் 1858
தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மிபை அவர்கள் அவர் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக்  கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.
இல்லற வாழ்க்கை
1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல்,  அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக,  அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.
1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.
படையெடுப்பு
ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
போர்
ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.
1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.
இறப்பு
ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது.
ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.
காலவரிசை
1828: ராணி லட்சுமிபாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார்.
1842:  ஜான்சியின் மகாராஜா ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார்.
1851:  அவரது மகன் பிறந்து, பின்பு நான்கு மாதங்களிலேயே காலமானான்.
1853: ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.
1853: நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.
1857: ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.
1858: ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் ஜான்சியை நோக்கி படையெடுத்தது.
1858: ஆங்கிலேயர்களின் போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்.

0 comments

இரட்டமலை சீனிவாசன்

Rettamalai-Srinivasanமிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதி, தலித் ஆர்வலர்,  சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தலித் இனத்தை சார்ந்த மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியாவில் தலித் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து வந்த இரட்டமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜூலை 7, 1859
பிறப்பிடம்: மெட்ராஸ் மாகாணம்இந்தியா
இறப்பு: செப்டம்பர் 18, 1945 
பணி: வழக்கறிஞர்பத்திரிகையாளர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், இந்தியாவில் சென்னை மாகாணத்தில் உள்ள பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
தனது தொடக்கக்கல்வியைக் கோழியாளத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றார். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரான தலித் சமூகத்தில் பிறந்ததாலும், குடும்ப வறுமைக் காரணமாகவும், சாதியக் கொடுமை காரணமாகவும் அவரது குடும்பம் கோழியாளத்தில் இருந்து தஞ்சைக்கும், பின்பும் கோவைக்கும் குடிபெயர்ந்தது. தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில், தனது பள்ளிப்படிப்பை மீண்டும் தொடர்ந்த அவர், தனது கல்லூரிப்படிப்பைக் கோவையில் முடித்தார். எங்கு சென்றாலும் தீண்டாமைக் கொடுமைத் தலைவிரித்து ஆடுவதைக் கண்டு வெகுண்ட அவர், அதற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.
இல்லற வாழ்க்கை
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.
ஆரம்பகாலப் பணிகள்
தனது கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர், எழுத்தராக நீலகிரியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1890ல் சென்னைக்கு வந்தார். 1891ல் ‘பறையர் மகாசன சபை’ மற்றும் 1893ல்  ’பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார். 1900 ஆம் ஆண்டு வரை அவ்விதழை நடத்திய அவர், அதே ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஒரு மொழிப்பெயர்பாளராக நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்த அவர், 1921ல் இந்தியா திரும்பினார்.
சட்டமன்ற உறுப்பினராக அவருடைய பங்கு
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1923 ஆம் ஆண்டு சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட அவர், 1924ல் சட்ட சபையில், ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்படி, ‘பொது வழியில் எந்தவொரு சாதி பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் நடக்கலாம். இத்தேசத்தில் உள்ள அனைத்து பொது உடைமைகளும், அனைவருக்கும் சொந்தமானவையே. மேலும், பள்ளர், பறையர் என்று அழைக்கப்படாமல், ஆதிதிராவிடர் என்று அழைக்கப்பட வேண்டுமென்றும், மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் போன்ற சமூக சீர்த்திருத்தங்களை நிறைவேற்றினார். மேலும், அவர் மணியக்காரர் முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பினார்.
லண்டன் வட்டமேஜை மாநாடு
லண்டனில் 1930, 1931 மற்றும் 1932களில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளின் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்டார் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு உரிமையைப் பெற்றுத் தர எண்ணி அவர்கள் இருவரும், அம்மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினர்.
இறப்பு
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, 1945 ஆம் ஆண்டில், பெரியமேடு என்னும் இடத்தில் தனது இறுதி மூச்சை விட்டார்.
காலவரிசை
  • 1859: மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
  • 1887: ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
  • 1890: சென்னைக்கு வந்தார்.
  • 1891: பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார்.
  • 1893: ‘பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார்.
  • 1900: வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார்.
  • 1921: இந்தியா திரும்பினார்.
  • 1923: சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
  • 1924: சட்ட சபையில், அவர் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
  • 1930. 1931 மற்றும் 1932: லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளின்  தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகப் அம்பேத்கருடன் கலந்துகொண்டார்.
0 comments

Sunday, June 15, 2014

விசுவநாதன் ஆனந்த்

Viswanathan_Anand‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வெற்றி வீரர் ஆவார். பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்று போற்றப்பட்டவர். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து’, பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார். இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப், பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் விசுவநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1969
பிறப்பிடம்: மயிலாடுதுறை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: சதுரங்க விளையாட்டு வீரர்  
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு 
விசுவநாதன் ஆனந்த்  அவர்கள், 1969  ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “மயிலாடுதுறை” என்ற இடத்தில் தந்தையார் ‘விஸ்வநாதன் அய்யர்’, என்பவருக்கும், தாயார் ‘சுசீலாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருக்கு சிவகுமார் என்ற சகோதரனும், அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், ஒரு பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
ஆறு வயதிலிருந்தே, தன்னுடைய தாயாரான சுசீலாவுடன் இணைந்து சதுரங்கம் விளையாடி, கூர்மையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள ‘டான் போஸ்கோ பள்ளியில்’ முடித்தார். பின்னர், உயர்க்கல்வி பயில ‘லயோலா கல்லூரியில்’ சேர்ந்த அவர், இளங்கலைப் படிப்பில் பி.காம் பட்டம் பெற்றார்.
சதுரங்க விளையாட்டில் விசுவநாதன் ஆனந்தின் பயணம்
ஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த இவருடைய தாயார் சுசீலா அவர்கள், சிறுவயதிலிருந்தே ஆனந்திற்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, ‘டால்’ என்ற சதுரங்க கிளப்பில் சேர்ந்து, மேலும் பயிற்சிப்பெற்ற அவர், தனது பதினான்கு வயதிலேயே தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். பின்னர், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதுதினைப் பெற்ற அவர், 1985 ஆம் ஆண்டு தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு மீண்டும் ‘சாம்பியன் பட்டம்’ வென்றார்.
வெற்றிப் பயணம்
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே, உலக அளவில் சதுரங்க தர வரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், ஃபைனல் செமஸ்டர் எழுதுவதற்குள் உலக சாம்பியன் போட்டிக்கானத் தகுதிச் சுற்றுக்காக விளையாட ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். பின்னர், 1988 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆனார். 1991 ஆம் ஆண்டு உலக சதுரங்கப் போட்டிக்கு முதன் முதலாக தகுதிபெற்ற அவர், அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ கிரீவை’ வென்றாலும், காலிறுதிச் சுற்றில் அதே நாட்டைச்சேர்ந்த அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து, 1995-ல் அரையிறுதியிலும், 1996 ஆம் ஆண்டு பிசிஏ உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்றிலும், 1997-ல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்கப் போட்டியில் இறுதிச்சுற்றிலும் தோல்விகண்ட விஸ்வநாதன் அவர்கள், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப்படைத்தார்.
சதுரங்க விளையாட்டில், இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 2003-ல் எப்ஐடிஇ ‘உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்’ பட்டத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் லூயிஸ் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர், 2007 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ‘இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும், தன்னுடைய பெயரை பதிவு செய்து இந்தியாவிற்குப் பெருமைத் தேடித்தந்தார். அதற்கு அடுத்த ஆண்டும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி ‘மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப் படைத்தார். 2010 –ல் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, ‘நான்காவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும் சாதனைப் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல், 2012 ஆம் ஆண்டு உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை சமன் முறி என்னும் ஆட்டத்தில் வீழ்த்தி ‘ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தினை’ வென்று உலக சாதனைப் படைத்தார். இன்னும் சொல்லப்போனால், டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக சதுரங்க சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.
இல்லற வாழ்க்கை
‘சதுரங்க விளையாட்டின் ராஜா’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 1996 ஆம் ஆண்டு ‘அருணா’ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, இவர்களுக்கு அகில் என்ற ஆண்குழந்தை பிறந்தார்.
விருதுகளும், மரியாதைகளும்
  • 1985 – ‘அர்ஜுனா’ விருது.
  • 1987 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
  • 1987 ஆம் ஆண்டிற்கான, ‘தேசிய குடிமகன்’ மற்றும் ‘சோவியத் லேண்ட் நேரு’ விருது.
  • 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கான, ‘ராஜீவ்காந்தி கோல் ரத்னா’ விருது.
  • 1998 – பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், ‘புக் ஆஃப் தி இயர்’ விருது.
  • 2000 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.
  • 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான, ‘சதுரங்க ஆஸ்கார்’ விருது.
  • 2007 – இந்திய அரசால் ‘பத்ம விபூஷன்’ விருது.
தன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ‘ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன்’ பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார். இன்னும் தன்னுடைய அபாரத் திறமையால் பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு, வெற்றிக் கொடி நாட்டிவருகிறார். குறிப்பாக சொல்லபோனால், ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில், இந்தியாவின் புகழை கடைசிகாலம் வரை நிலைநிறுத்திய பெருமை நிச்சயம் விஸ்வநாதன் ஆனந்த்தையே சேரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
0 comments

பி. டி. உஷா

P-T-Ushaபி. டி. உஷா, கேரளாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986  ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்த சாதனையை இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வேறு எந்த இந்தியரும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவரை “இந்திய தடகளங்களின் அரசி” எனவும், ‘இந்தியாவின் தங்க மங்கை’ எனவும், “பய்யொலி எக்ஸ்பிரஸ்” எனவும் வர்ணிக்கப்படுகிறார். தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படும் பி. டி. உஷா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜூன் 27, 1964
இடம்: பய்யோலி (கோழிக்கோடு மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா
பணி: தடகள விளையாட்டு விராங்கனை.
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
பி. டி. உஷா என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் “பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா” அவர்கள், 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள “பய்யோலி” என்ற இடத்தில் பைத்தல் என்பவருக்கும், இலட்சுக்கும் மகளாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவர், தன்னுடைய பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வார். அதேபோல் 1976 ஆம் ஆண்டு கேரளா மாநில அரசு, கண்ணூரில் பெண்களுக்கான விளையாட்டுப் பள்ளியைத் தொடங்கியது. அதில் கோழிக்கோடு மாவட்டத்தின் சார்பில் இவர் தெடுக்கப்பட்டார்.
தேசிய அளவில் அவரின் சாதனைகள்
தடகள விளையாட்டில் புயல் வேகத் திறமையினை வளர்த்துக்கொண்டு வந்த அவர்,  முதன் முதலாக 1977 ஆம் ஆண்டு தன்னுடைய 13 வயதில் தேசிய அளவிலான தடகள விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு, தன்னுடைய முதல் தேசிய சாதனையைப் படைத்தார். பிறகு, தொடர்ந்து பல தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றதோடு மட்டுமல்லாமல், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
சர்வதேச அளவில் அவரின் சாதனைகள்
தேசிய அளவில் பல தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களையும், பலருடைய பாரட்டுகளையும் வென்ற அவர், பின்னர் சர்வதேச அளவில் கால் பதிக்கத் தயாரானார். 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக சர்வதேச அளவில் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் பங்கேற்று, பதக்க வாய்ப்பை இழந்தாலும், அதன் பிறகு 1982 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதுவே அவருடைய முதல் சர்வதேச பதக்கமாகும். பின்னர் குவைத்தில் நடைபெற்ற சாம்பியன் தடகளப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில், ‘தங்கம்’ வென்று புதிய சாதனைப் படைத்தார். அதன் பிறகு, 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 23வது ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில், அரையிறுதியில் முதலாவதாக வந்தாலும், இறுதி ஓட்டத்தில் 100ல் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், ஒலிம்பிக் போட்டியில் இறுதிபோட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய விராங்கனை என்ற சிறப்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டப்பந்தயத்தில் அவரே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 1986ல் சியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்திலும் முழு ஆதிக்கம் செலுத்தி, தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று வெற்றிவாகை சூட்டினார். இச்சாதனையைப் பாராட்டி, மத்திய அரசு அவரை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கியது. அதன் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த அவர்களுக்கு “ஆசிய தடகள ராணி” எனப் பட்டம் சூட்டப்பட்டது. 1983 முதல் 1989 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அவர்,  சுமார் 13 தங்கப் பதக்கங்களை வென்றார்.
இல்லற வாழ்க்கை
சுமார் 28 வயதுவரை விளையாட்டு மட்டுமே வாழ்க்கைத் துணை என்று பயணித்த பி. டி. உஷா அவர்கள், 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் மலப்புரம் மாவட்டத்தில் வசித்துவந்த சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு
திருமணத்திற்குப் பிறகு, சுமார் 3 ஆண்டுகள் விளையாட்டில் பங்கேற்காமல் இருந்த அவர், தன்னுடைய கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக மீண்டும் போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார். 1998 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ‘வெண்கலப் பதக்கம்’ வென்றார். ஆசியப் போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பி. டி. உஷா அவர்கள், அதுவரை அவர் பங்கேற்ற சர்வதேச போட்டிகள் மூலம் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு
 காலில் தொடர்ந்து அவருக்கு வலி ஏற்பட்டதன் காரணமாக, ஓய்வு எடுத்துகொள்ள முடிவு செய்த அவர், ஜூலை 25, 2000-ல் தனது 36வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சுமார் 20 ஆண்டுகளாகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பல சாதனைகளைப் படைத்து, இந்திய விளையாட்டுத் துறைக்கு அறிய பங்காற்றிய அவரை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு “பத்மஸ்ரீ” மற்றும் “அர்ஜுனா” விருதுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பணியையும் வழங்கி கௌரவித்தது.
விருதுகளும், மரியாதைகளும்
  • 1984 – மத்திய அரசிடம் இருந்து “அர்ஜுனா விருது”
  • 1984 – இந்திய அரசிடம் இருந்து “பத்மஸ்ரீ விருது”
  • 1985 – ஜகார்த்தா ஆசிய தடகள மீட் மூலம் ‘சிறந்த பெண் தடகள விராங்கனைக்கான விருது’.
  • 1984,1985,1986,1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளுக்கான ‘சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான ஆசியா விருது’.
  • 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளுக்கான ‘சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான உலகக்கோப்பை’ வழங்கப்பட்டது.
  • 1986 – சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் ‘சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது’.
  • 1999 – ‘கேரள விளையாட்டு பத்திரிக்கையாளர் விருது’.
0 comments