கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி தாமே தமது காரை ஓட்டிச் செல்லும் காட்சியைப் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்த நாட்டின் முதல் பெண்மணி
மனைவி அருகே அமர்ந்திருக்க ஜனாதிபதியவர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதொரு சூழ்நிலையில் தமது காரைப் படுவேகமாக ஓட்டிச் சென்றிருப்பாரென்பதில் எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.
மேலும் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதை நியாயப்படுத்தும் முகமாக ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து விமானத்தில் இலங்கைக்கு வருவதாயின் ஒரு மணி நேரம் போதுமானது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வருவதாயின், இதை விட அதிக நேரம் எடுக்கின்றது. புதிய அதிவேகசாலை அமைக்கப்பட்டதால் இனிமேல் 20 நிமிடங்களே பயணத்துக்குப் போதுமானது என்பதுதான் அந்தத் தகவல். இதனைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. நேரத்தை வீணாக்குவதற்கு எவர்தான் விரும்புவார்கள்.
சாதாரண மக்களின் பாவனைக்கு உதவாத அதிவேக நெடுஞ்சாலைகள்
ஆனால் பல கேள்விகள் ஒரே சமயத்தில் எழுந்து மனதைக் குடைகின்றன. இந்த வீதியை இங்கு வாழ்கின்ற சாதாரண மனிதர்களில் எத்தனை பேர் பயன்படுத்தப்போகின்றனர்.? அதற்கான வசதிகள் அவர்களிடம் உள்ளனவா? இந்த வீதியில் பயணிப்பதற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கான வசதியைக் கூடப் பலர் பெற்றிருக்கவில்லை என்பதை உயர்மட்டத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்களா?
ஆனால் இவற்றுக்கெல்லாம் விடைகிடைக்கவே கிடைக்காது.
அண்மையில் வெளிவந்த செய்திகளின்படி நாம் வறுமையான நிலையிலுள்ள நாடொன்றில் வாழ்கின்றோம் என்பதை அறிந்து கொண்டோம் ஒரு வேளை உணவுக்கு கூடப் போராடும் நிலையில் பலர் இங்கு உள்ளனர். உணவுப் பொருள்களின் விலைகள் சாதாரண மனிதனால் எட்டிப்பிடிக்க முடியாத அளவு தூரத்துக்கு உயர்ந்து விட்டன. சிலரால் பாணைக்கூட எட்டியிருந்து பார்க்க மட்டுமே முடிகின்றது.
அது கூட விலையளவில் உயர்ந்து ஆடம்பரமான உணவாக மாறிவிட்டது. அரச உத்தியோகத்தர்களில் முக்கால் வாசிப்பேர் கடனாளிகளாக மாறியுள்ளனர். அவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் வேதனம் அரை மாதத்துக்கே போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்களின் நிலை பற்றிக் கூறத் தேவையில்லை. பலர் இன்று ஒரு சைக்கிளைக் கூட வாங்க முடியாத நிலையில் நடை ராசாக்களாக உலாவி வருகின்றனர். ஒரு சைக்கிள் இவர்களுக்குக் கிடைத்து விட்டால், புஷ்பக விமானத்தில் பறப்பது போன்ற மகிழ்ச்சியை இவர்கள் அனுபவிப்பார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி கூட இவர்களுக்குக் கிடைப்பதாகவில்லை.
அபிவிருத்தி என்பது இதுவல்ல.
இந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலையை இவர்கள் எண்ணிப் பார்க்கக் கூட முடியாது.
ஒரு நாடு அபிவிருத்தி காணவேண்டியதன் அவசியத்தை எவரும் மறுக்க முடியாது. ஆனால் அது அனைவருக்கும் பயன்தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.
அபிவிருத்தி என்பது புதிய விமான நிலையங்கள், துறை முகங்கள், அதிவேக நெடுஞ் சாலைகள், பல அடுக்கு மாடிக் கட்டடங்கள், உல்லாச விடுதிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் என்பவற்றை அமைப்பதில் மட்டுமே தங்கியிருக்கவில்லை. ஒரு நாட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பொருளாதார வளர்ச்சியே உண்மையான அபிவிருத்தியாகும்.
தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி, கல்வி, தங்குமிடம் ஆகியன மக்களுக்குக் குறைவில்லாத வகையில் கிடைப்பதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இவையயல்லாம் நிறைவேறிய பின்னர் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பாகச் சிந்திக்கலாம்.
ஓடுவதற்கு ஒரு சைக்கிள் வாங்குவதற்குக் கூட வக்கில்லாமல் இருக்கும் ஒருவனுக்கு அதிவேக நெடுஞ்சாலையும் ஒன்றுதான், சேதமடைந்து குன்றும் குழியுமாகக் காணப்படும் வீதியும் ஒன்று தான். கையில் ஒரு சைக்கிள் கிடைத்த பின்னர் தான் அவன் வீதியைப் பற்றியே சிந்திப்பான்.
இன்று உலகில் சுமார் 7 கோடியே 70 லட்சம் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லையென்ற அதிர்ச்சித் தகவலொன்று அண்மையில் வெளி வந்தது.
இந்தத் தொகையில் எமது நாட்டிலுள்ள சிறுவர்களும் அடங்குகின்றனர். முதலில் இவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாத காரணங்கள் ஆராயப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்படல் வேண்டும். பாடசாலை செல்லாத சிறுவர்கள் அனைவரும் மீண்டும் பாடசாலை செல்ல வேண்டும். இதுதான் உண்மையான அபிவிருத்தி.
மேலும் ஒரு நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்படும்போது அந்த நாட்டின் தேசிய வருமானம் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து வேறு நாடுகளி லிருந்து கடன் பெற்று அபிவிருத்தியைக் காணலாமெனக் கனவு கண்டால் அது அந்த நாட்டின் குடிமக்களை நிரந்தரக் கடனாளிகளாக மாற்றிவிடுமென்பதில் ஐயமே இல்லை.
அதுதான் எமது நாட்டிலும் அரங்கேறி வருகின்றது.
வசதி படைத்தவர்கள் அனுபவிக்கும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படும்போது, வசதி குறைந்தவர்கள் மேன்மேலும் நசுக்கப்படுவார்கள் என்பதை ஏனோ உயர்மட்டங்கள் இன்னமும் உணரவில்லையென்பது மிகப்பெரிய சாபக்கேடாகவே காணப்படுகின்றது.
கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற கொடிய போர் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்தப் பகுதி மக்களின் அவலங்கள் தீரவில்லை.
ஏராளமானவர்கள் தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு தற்காலிகக் கொட்டில்களில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வழி எதுவும் தெரியவில்லை. பசியைப் போக்குவதற்கும் உரிய மார்க்கம் புரியவில்லை. பலர் குடிதண்ணீர் வசதியின்றி நாவறள அவஸ்த்தைப்படுகின்றனர்.
ஏராளமானவர்கள் இன்னமும் மின்சார வசதி கிடைக்காததால் இருளையே துணையாகக் கொண்டு அவல வாழ்வு வாழ்கின்றனர். இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நிதி அரசிடம் இல்லையயன நாட்டின் உயர் மட்டம் கைவிரித்து விட்டது.
இந்த நிலையில் வேறொரு நாட்டிடம் கடன் பெற்று அபிவிருத்தியைக் காணலாம் என்ற மாயையில் இனியும் ஆளும் வர்க்கத்தினர் மூழ்கியிருப்பார்களானால், அதை இந்த நாட்டின் சாதாரண மக்கள் இனியும் பொறுக்கமாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதுதான் உண்மை
0 comments
Post a Comment