Pages

Wednesday, May 21, 2014




நேரு முதல் மோடி வரை 




1952: சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல். 489 மக்களவைத் தொகுதியில் 364 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மொத்த வாக்காளர்கள் 23,70,41,443. பதிவான வாக்குகள் 16,02,75,056. வாக்குப்பதிவு 67.6 சதவீதம். 54 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. 16 இடங்களில் வென்று இந்திய கம்யூனிஸ்ட் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 




மும்பை தொகுதியில் போட்டியிட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தை, சட்ட அமைச்சராக இருந்து உருவாக்கிய சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கர் தோல்வியைத் தழுவியதுதான் மிகப்பெரிய சோகம். இந்தியக் குடியரசில் முதல் பிரதமராகப் பண்டித ஜவாஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1957: இந்தத் தேர்தலில் நேரு தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 494 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 371 இடங்களில் வென்றது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 47.8. மொத்த வாக்காளர்கள் 26,5241,358. பதிவான வாக்குகள் 18,20,75,041. வாக்குப்பதிவு 68.6 சதவீதம். இந்திய கம்யூனிஸ்ட் 27 இடங்களில் வெற்றி. 16 அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கேற்றன.

இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெஃரோஸ் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் போட்டியிட்டு, கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முதல்முறையாக தி.மு.க. தேர்தலில் பங்கு வகித்தது. ஈ.வெ.கி. சம்பத், அன்பில் தர்மலிங்கம் ஆகிய இரண்டு தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1962: காங்கிரஸ் இந்தத் தேர்தலிலும் வென்று "ஹாட்ரிக்' அடித்தாலும் பெற்ற வாக்குகள் 44.7 சதவீதமாகக் குறைந்தது. 494 தொகுதிகளில் காங்கிரஸ் 361 இடங்களில் வென்றது. இந்திய கம்யூனிஸ்ட் இந்த முறை 29 இடங்களைக் கைப்பற்றியது. ராஜாஜியால் உருவாக்கப்பட்ட சுதந்திரா கட்சி முதன்முதலாகத் தேர்தல் களம் கண்டது. 6.8% வாக்குகளுடன் 18 மக்களவைத் தொகுதிகளில் அந்தக் கட்சி வென்றது. மொத்த வாக்காளர்கள் 21,63,61,569. பதிவான வாக்குகள் 11,98,96,443. மொத்த வாக்கு சதவீதம் 55.4 சதவீதம்தான். அதாவது கடந்த தேர்தலைவிட 13.1 சதவீதம் குறைவு. 28 அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்தன.
இந்தக் காலகட்டத்தில் இந்தியா இரண்டு பிரதமர்களை அடுத்தடுத்து இழந்தது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் ஜவாஹர்லால் நேரு மறைந்தார். அவருக்கு அடுத்து பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்திரி 1966 ஜனவரியில் காலமானார். இரண்டு முறையும் இடைக்காலப் பிரதமராக குல்ஜாரிலால் நந்தா பதவி வகித்தார். பிறகு இந்திரா காந்தி பிரதமரானார்.
1967: இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டாலும் அக்கட்சி வெற்றிபெற்ற இடங்கள் கணிசமாகக் குறைந்தன. மொத்தம் தேர்தல் நடைபெற்ற 520 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் 283 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. (1962 தேர்தலில் கிடைத்ததைவிட 83 இடங்கள் குறைவு). காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 40.8. சுதந்திரா கட்சி 44 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மொத்த வாக்காளர்கள் 25,02,07,401. பதிவான வாக்குகள் 15,26,97,161. மொத்த வாக்கு சதவீதம் 61. இத்தேர்தலில் 26 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் ஸ்தாபன காங்கிரஸ், ஆளும் காங்கிரஸ் என்று காங்கிரஸ் பிளவுற்றது. ஸ்தாபன காங்கிரஸ் மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சுபாக் சிங், முதல் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் பெற்றார்.
1971: சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. 1972 வரை பதவிக்காலம் இருந்தும், பிரதமர் இந்திரா காந்தி மக்களவையைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு வழிவகுத்தார். மொத்தம் உள்ள 518 இடங்களில் 352 இடங்களில் காங்கிரஸ் வென்று ஐந்தாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 29 இடங்களில் மட்டுமே வென்றது. ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 16 இடங்களே கிடைத்தன. மொத்த வாக்காளர்கள் 27,41,89,132. பதிவான வாக்குகள் 15,15,36,802. அதாவது வாக்குப்பதிவு 55.3 சதவீதம்.
இந்திரா காந்தி இரண்டாவது முறையாகத் தேர்தலில் வென்று மூன்றாவது முறையாகப் பிரதமரானார். "வறுமையை ஒழிப்போம்' என்ற இந்திரா காந்தியின் பிரசாரத்துக்குப் பலன் கிடைத்தது. கடந்த தேர்தலைவிட 70 இடங்கள் கூடுதலாகப் பெற்றது காங்கிரஸ். ஆனால் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை செல்லாததாக்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். அதன் தொடர்ச்சியாக அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு "மிசா'வில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1977: இத்தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத தேர்தல். 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. 1975இல் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்த இந்திரா காந்திக்கு இந்தத் தேர்தல் பலத்த அடியாக அமைந்தது. இந்திரா காந்தி மட்டுமல்ல; அவருடைய மகன் சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
நாடு முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசியதால், 542 இடங்களில் 345 இடங்களில் வென்று பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்த ஜனதா அணி ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் நாட்டின் பிரதமரானார். இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸýக்கு 154 இடங்களே கிடைத்தன. மொத்த வாக்கு சதவீதம் 60.5. இத்தேர்தலில் 54 அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்தன.
ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து சரண்சிங் பிரதமரானார். சரண்சிங் அமைச்சரவையில் அ.தி.மு.க. சார்பில் சத்தியவாணி முத்து, பாலா பழனூர் இருவரும் அமைச்சர்களானார்கள். மாநிலக் கட்சி மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றது அதுவே முதல்முறை.
ஜனதா அரசு அமைந்தபோதிலும் உள்கட்சிப் பூசல் காரணமாக அந்த அரசு நீடிக்காமல் கவிழ்ந்தது. இதனால் மூன்றாண்டுகளில் மற்றொரு தேர்தலை நாடு சந்திக்க நேர்ந்தது.
1980: இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தது. 542 இடங்களில் 353இல் வென்று அக்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். ஜனதா கட்சி 41 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வாக்காளர்கள் 35,62,05,329. பதிவான வாக்குகள் 20,27,52,893. வாக்கு சதவீதம் 56.9.
மொரார்ஜி தேசாய் ஆட்சியைக் கவிழ்த்துப் பிரதமரான சரண்சிங், காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக வாக்குறுதி அளித்து பின்வாங்கியதால் வேறுவழியில்லாமல் 1980இல் ஆட்சியைக் கலைத்து தேர்தலுக்கு வித்திட்டார். தேர்தலைச் சந்திக்காமலேயே முதன்முதலில் பிரதமரானவர் சரண்சிங்தான். பின்னாளில் சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள் அதுபோல் பிரதமரானவர்கள்.
1984: பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் நடைபெற்றது. இந்திரா மறைவு அனுதாப அலையால் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் 415 இடங்களில் வென்றது. இந்திராவின் புதல்வர் ராஜீவ் காந்தி பிரதமரானார். காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 48.1. மொத்த வாக்காளர்கள் 40,03,75,333. பதிவான வாக்குகள் 25,62,94,963. வாக்குப்பதிவு 64 சதவீதம். 37 அரசியல் கட்சிகள் பங்கேற்றாலும், மாநில அரசியல் கட்சியான தெலுங்கு தேசம் 30 இடங்களில் வென்று தேசிய அளவில் எதிர்க்கட்சியானது.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த தம்பிதுரை மக்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மக்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே முதல்முறை. ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக போஃபர்ஸ் பீரங்கி ஊழல் பரபரப்பாக வெளியானது.
1989: ராஜீவ் காந்தி தலைமையில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு பலத்த சரிவு ஏற்பட்டது. போஃபர்ஸ் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளால் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 197 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி 143 இடங்களில் வென்றது. வி.பி.சிங் பிரதமரானார். அவரது ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகளும் பா.ஜ.க.வும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. மொத்த வாக்காளர்கள் 49,89,06,129. பதிவான வாக்குகள் 30,90,50,495. வாக்குப்பதிவு சதவீதம் 61.9.
அதுவரை இல்லாத அளவாக 115 கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்தன. மூன்றாவது அணிக்கு முதன் முறையாக பா.ஜ.க. ஆதரவு அளித்தது இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான்.
முதன்முறையாக தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தது. மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வி.பி.சிங் அரசு முற்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய கிளர்ச்சி எழுந்தது. எல்.கே. அத்வானி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்தி ரத யாத்திரையைத் தொடங்கினார். அதை வி.பி.சிங் அரசு தடுக்க முற்பட்டதால், அந்த அரசுக்கான ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. வி.பி.சிங் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமரானார்.
1991: பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அரசு நீடிக்க முடியாத சூழ்நிலையில் குறுகிய காலத்திலேயே (1991) மீண்டும் தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 244 இடங்களில் வென்று பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் சிறுபான்மை அரசாகப் பதவியேற்றது. பா.ஜ.க. 120 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதாவது முதன்முறையாக பா.ஜ.க. மூன்று இலக்க எண்ணைத் தொட்டது. மொத்த வாக்காளர்கள் 51,15,33,598. பதிவான வாக்குகள் 28,58,56,465. வாக்குப்பதிவு சதவீதம் 55.9.
பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகமானது. மற்றொன்று 1992 டிசம்பரில் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் ஐந்தாண்டுகள் பிரதமராகத் தொடர்ந்தது இதுவே முதன்முறை.
1996: இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க. 161 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக விளங்கியது. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற போதிலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 13 நாள்களில் ஆட்சி கவிழ்ந்தது. இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 59,25,72,288. பதிவான வாக்குகள் 34,33,08,090. வாக்குப்பதிவு சதவீதம் 57.94.
140 இடங்களில் வென்று காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் வந்தபோதிலும் ஆட்சியமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஜனதாதளம் மற்றும் இதர கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி அரசை ஆதரிக்க காங்கிரஸ் முன்வந்தது. தேவெகௌடா பிரதமரானார்.
ஆனால், 1997இல் காங்கிரஸ் தனது ஆதரவை திடீரென்று விலக்கிக்கொண்டதை அடுத்து தேவெகௌடா அரசு கவிழ்ந்தது. அடுத்து ஐ.கே.குஜ்ரால் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் அவரது அரசும் வெகுநாள் நீடிக்கவில்லை. 1996-98 காலகட்டத்தில் இந்திய அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை இருந்தது. தேவெகௌடா, குஜ்ரால் இருவரின் அமைச்சரவையிலும் தி.மு.க. அங்கம் வகித்தது.
1998: இந்தத் தேர்தலில் பா.ஜ.க. 182 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக விளங்கியது. காங்கிரஸýக்கு 141 இடங்களே கிடைத்தன. பா.ஜ.க. தலைமையில் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி 256 இடங்களுடன் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 144 இடங்கள் கிடைத்தன. மூன்றாவது அணி 74 இடங்களைப் பெற்றது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 60,58,80,192. பதிவான வாக்குகள் 35,54,41,739. வாக்குப்பதிவு சதவீதம் 61.97.
வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது. 1999 ஏப்ரலில் அ.தி.மு.க. இக்கூட்டணியிலிருந்து விலகியதை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோற்று ஆட்சியை இழந்தது. இந்த முறை வாஜ்பாய் அரசு 13 மாதங்களே ஆட்சியில் இருந்தது.
12ஆவது மக்களவையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் - பொக்ரானில் அணுகுண்டு வெடித்து இந்தியா தன்னையும் அணு ஆயுத சக்தி நாடாக அறிவித்ததும், தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து நடந்த கார்கில் யுத்தமும்.
1999: பா.ஜ.க. தலைமையில் காபந்து அரசு ஆட்சியிலிருந்தபோது கார்கில் போர் நடந்தது, அதை இந்தியா எதிர்கொண்ட விதம் இவை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர உதவியது எனலாம். இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க. 182 இடங்களில் வென்றது. காங்கிரஸýக்கு 114 இடங்களே கிடைத்தன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 299 இடங்களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 139 இடங்களும் கிடைத்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க.வுக்குப் பதிலாக தி.மு.க. அங்கம் வகித்தது. மூன்றாவது அணி 41 இடங்களில் மட்டுமே வென்றது. வாஜ்பாய் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 61,95,36,847. பதிவான வாக்குகள் 37,16,69,104. வாக்குப்பதிவு சதவீதம் 59.99. இந்த முறை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்தது.
2004: இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 222 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. மன்மோகன் சிங் பிரதமரானார். கடந்த முறை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க. இந்த முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக அங்கம் வகித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 189 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மூன்றாவது அணிக்கு 55 இடங்களே கிடைத்தன.
மொத்த வாக்காளர்கள் 67,14,87,930. பதிவான வாக்குகள் 38,93,42,364. வாக்குப்பதிவு சதவீதம் 58. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சோனியாவை பிரதமர் பதவியேற்குமாறு வலியுறுத்தியும் அவர் மறுத்துவிட்டார். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இடதுசாரிகள் அரசுக்கான தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்ந்தது.
2009: இந்தத் தேர்தல் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதிவரை 5 கட்டங்களாக நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 71.4 கோடி பேர். மொத்த வாக்குப்பதிவு 59.7 சதவீதம். 543 தொகுதிகளுக்கு 8,070 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 332 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றது. மன்மோகன் சிங் பிரதமரானார். பகுஜன் சமாஜ், சமாஜவாதி, மதச்சார்பற்ற ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் மன்மோகன் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தன.
ராஜஸ்தான் மாநிலம் டௌசா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற சச்சின் பைலட் 26 வயதில் எம்.பி.யாகி சாதனை படைத்தார். இந்த ஆட்சியிலும் அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு, நிலக்கரி ஊழல் என்று ஒன்றன் பின் ஒன்றாக மெகா ஊழல்கள் வெடித்தவண்ணம் இருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் பாதியில் வெளியேறியது தி.மு.க.
2014: 16ஆவது மக்களவைக்கான தேர்தல் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் வரலாற்றில் அதிக நாள்கள் நடைபெற்ற தேர்தல் இதுதான்! மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்கள் 81 கோடி. பதிவான வாக்குகள் சதவீதம் 66.38.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றது. பா.ஜ.க. மட்டும் 282 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 59 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அக்கட்சி 44 இடங்களில் மட்டுமே வென்றது. நரேந்திர மோடி பிரதமராகிறார்.
1989ஆம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் அல்லாத அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை. சுதந்திர இந்தியாவில் பிறந்த ஒருவர் பிரதமராவதும், மாநில முதல்வர் ஒருவர் தேசிய அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதும்கூட இதுவே முதல் முறையாகும்.

0 comments

Post a Comment