Pages

Saturday, May 24, 2014

கேஜரிவாலின் காந்தி வேடம்

அன்று 100 ரூபாய்க்கு பிணையில் செல்ல மறுத்தார் மகாத்மா காந்தி. இப்போது 10,000ரூபாய்க்கு பிணையில் செல்ல மறுத்தால், ஊடகங்களும் காங்கிரஸூம் நாடகம் என்கின்றன.'
சமூக வலைதளங்களில் பல விதமான முகவரிகளில் மின்னேற்றம் பெறும் பதிவுகள், ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால், ஒரு அவதூறு வழக்கில் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசுகின்றன.
அட்டன்பரோ இயக்கிய "காந்தி' திரைப்படத்தில், சாம்பரன் நீதிமன்றத்தில், பிணையில் செல்ல விரும்பவில்லை என்று காந்தி பேசும் வசனக் காட்சி இடம்பெறும் யு-ட்யூப்க்கு இழுத்துச் செல்லும் பதிவுகளும் இதில் அடங்கும்.
பிணையில் செல்ல விரும்பவில்லை என்று தான் கூறியவுடன், தனக்காக திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, தன்னை பிணை இல்லாமலேயே நீதிபதி விடுவித்துவிடுவார் என்று கேஜரிவால் கருதியிருக்கலாம். ஆனால் அன்று காந்தி நடத்திய போராட்டம் வேறு, அன்றைய சூழல் வேறு.
விவசாயிகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தியை சாம்பரன் பகுதியிலிருந்து வெளியேறச் சொல்கிறது ஆங்கிலயே அரசு. அவர் மறுக்கிறார். அதற்காக காந்தியை கைது செய்கிறார்கள். "அரசாங்க சட்டத்தை மீறியிருக்கிறேன். மதிக்கக்கூடாது என்பதற்காக அல்ல, மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு மீறியிருக்கிறேன்' என்கிறார் காந்தி. "தண்டனை கொடுங்கள்' என்றுதான் நீதிபதியிடம் கேட்கிறார்.
வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோருகின்றனர் ஆங்கிலேய அரசின் வழக்குரைஞர்கள். காந்தி அதற்கும் உடன்படவில்லை. பிணையில் செல்லுங்கள் என்கிறார் நீதிபதி. அதையும் காந்தி ஏற்க மறுக்கிறார். வேறு வழியின்றி, காந்தியை விடுவித்து, தீர்ப்பைத் தள்ளி வைக்கும் நீதிபதி, பிறகு தீர்ப்பிலும் காந்தியைக் குற்றமற்றவராக விடுவிக்கிறார்.
இந்தப் போராட்டத்தையும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி மீது கேஜரிவால் சொன்ன ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கையும் ஒன்றுபடுத்திப் பேசுவது சரியல்ல.
பிணையில் செல்ல மறுத்த காந்தியை அன்றைய ஆங்கிலேயே மாஜிஸ்ட்ரேட் விடுவிக்கக் காரணம் என்ன?
மிகச் சாதாரண விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை இழந்துவிடும் கடன்சுமையில் இருந்தபோது, அதில் உள்ள அநியாயத்தை அம்பலப்படுத்தி அவர்களுக்காகப் போராடும் காந்தி, அரசு வெளியேறச் சொன்ன பிறகும் அதை ஏற்க மறுத்து விவசாயிகளோடு களத்தில் நிற்கிறார்.
இதை நீதிபதியால் ஒரு குற்றமாக - சட்ட மீறலாகக் கருத முடியவில்லை. ஆனால் காந்தியோ, "சட்டத்தை மீறினேன். தண்டனை கொடு' என்கிறார்.
கேஜரிவாலும் அத்தகைய அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். "கட்கரி மீது நான் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வேன். நீங்கள் இப்போதே தண்டிக்கலாம். வழக்கை தள்ளி வைக்க வேண்டாம்' என்று அவர் கூறியிருக்கலாம்.
அவர் அப்போதே தண்டனையைக் கோரியிருந்தால் அது சத்தியாகிரகப் போராட்டமாக இருந்திருக்கும். நீதிபதியும்கூட தயங்கி இருப்பார். ஆனால் கேஜரிவால் தன்னை பிணை இல்லாமல் விடுவிக்க வேண்டும் என்று மட்டும் விரும்புகிறார். ஆகவேதான், ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சொல்கின்றன அவர் நாடகமாடுகிறார் என்று.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிபெற முடிந்த கேஜரிவாலால், மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
அறுதிப்பெரும்பான்மை பலம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதல்வர் பதவியை ஏற்றவர், கொஞ்சம் கொஞ்சமாக தனது அதிகாரத்தை வலுவாகப் பயன்படுத்தாமல், ஆட்சியிலிருந்து விலகியபோது மக்கள் ஆதரவையும் அவர் பெருமளவு இழந்துவிட்டார். அதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் தில்லி மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி சந்தித்திருக்கும் தோல்வி.
இந்த வேளையில், இவருடன் இணைந்து செயல்பட்ட கிரண்பேடி, தான் தில்லி முதல்வராக பதவி ஏற்கத் தயார் என்று சொல்லும் நிலையில், அண்ணா ஹசாரே மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.
ரூபாய் 100க்கு பிணையில் செல்ல மறுத்த காந்தியை விடுவித்த ஆங்கிலேயே நீதிபதி போல, ரூபாய் 10,000க்கு பிணையில் செல்ல மறுத்த ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவாலை விடுவிக்காத நீதிபதியை குறை காண முடியாது.
பாவம் கேஜரிவால், அவருக்கு அரசியலும் தெரியவில்லை, நாடகமாடவும் தெரியவில்லை. ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல, அர்த்தமற்றப் போராட்டக்காரனுக்கும் புத்தி மட்டு!

0 comments

Post a Comment