Pages

Saturday, May 24, 2014

வேண்டாம் செயற்கை உரங்கள்

நாம் நமது வருங்கால சந்ததியினருக்கு பணம், சொத்து சேர்த்து வைத்திருந்து என்ன பயன்? அவர்களுக்கு தூய்மையான காற்று, நிலம், நீர் ஆகியவற்றை வைத்திருப்பதே மிகப் பெரிய சொத்து ஆகும். இனி வரும் காலங்களில் தூய்மையான காற்று, ரசாயன கலப்பற்ற மண், தூய்மையான நீர் கிடைப்பது மிகவும் அரிது.
எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது பிறக்கும் குழந்தைகளின் உடலில் கெமிக்கல் கலந்து இருப்பதாக ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் கெமிக்கல், உணவில் ரசாயன உரங்கள், காற்று மாசு இவ்வாறு அனைத்தையும் நாம் மாசுபடுத்தினால் பிறக்கும் குழந்தைகள் உடலில் கெமிக்கல் கலக்கத்தானே செய்யும்?
அதனால்தான் இப்போது முதியோர்களுக்கு வரக்கூடிய சர்க்கரை நோய், இருதய நோய், கண் குறைபாடு போன்ற நோய்கள் எல்லாம் வளரும் குழந்தைகளுக்குக்கூட ஏற்படுகிறது.
இதற்கு காரணம் விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விளைநிலங்களில் தூவப்படும் ரசாயன உரங்களே.
மண்ணை பண்படுத்துகிறோம் என்ற நோக்கில் இயந்திரங்களை வைத்து மண்ணை உழும்போது உழவனின் நன்பன் என்று கூறப்படும் மண்புழு போன்ற நன்மை தரும் புழுக்களை அழிக்கிறோம்.
அதன்பின் விதைகளை பூச்சிகள் தாக்கக் கூடாது என்ற நோக்கில் விதைகளில் கெமிக்கல் கலந்து வைத்தே பாதுகாக்கிறோம். பூமியில் விதைகளை விதைக்கும் போது ராசயன உரங்களை கலந்தே விதைக்கிறோம்.
பயிர் வளர்ச்சியடைவதற்கு தேவையான தழைச்சத்து, மணிசத்து போன்ற சத்துகள் இயற்கையாகவே கிடைப்பதற்கு பதிலாக ரசாயன உரங்களை போடுகிறோம்.
மேலும் பூச்சி தாக்குதலின் போது அவற்றை அழிப்பதற்காக சக்தி வாய்ந்த பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்கிறோம். ஒரு பயிர் மண்ணில் விதைப்பதில் இருந்து அது மக்களைச் சென்றடையும் வரை ரசாயன உரங்களையே பயன்படுத்துகிறோம். எவ்வாறு நமக்கு தூய்மையான உணவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.
நம் முன்னோர்கள் இன்றும் திடகாத்திரமாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணமே இயற்கையோடு ஒன்றி இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்ததே.
காலையில் எழுந்தவுடன் நீர் ஆகாரம், அதன் பின்னே பழைய சோறு. மதியம் அதே உணவு தான், இரவில் சூடு சோறு அந்த சாப்பாட்டின் மீதம் இருப்பதுதான் மறுநாளுக்கு உணவு அதை அப்படியே மண்சட்டியில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் சாப்பிட்டால் அந்த நீராகாரத்திற்கு இணையேதுமில்லை.
அன்று வாழ்ந்தவர்கள் கிழே விழுந்து காயம் ஏற்பட்டால், மண்ணை எடுத்து காயத்தில் போட்டால் காயம் ஆறிவிடும்.
இன்றைய காலத்தில் பயிர்களில் போடப்பட்டுள்ள அபரிமிதமான ரசாயன உரங்களால் நாம் சாப்பிடும் சாப்பாடு கூட விஷமாகிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பெயர் சொல்ல முடியாத நோய்கள் எல்லாம் உருவாகிவருகின்றன.
பயிருக்கு போடப்பட்ட ரசாயன உரங்கள் மழைக் காலங்களில் தண்ணீரில் கலந்து நீர் நிலைகள் மாசடைய செய்கிறது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு ஆகியவையும் ஆறு, குளம் மற்றும் நீர் நிலைகளில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது.
அதேபோல் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுபடுகிறது. இதனால் ஒசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, பூமியில் அதிக வெப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நாம்தான்.
நம் முன்னோர் இயற்கை உரங்களையும், உடலுக்கு ஏற்ற உணவு வகைகளையும், நோய் தீர்க்க பல அற்புத மூலிகைகளையும் நமக்கு வழங்கி சென்றார்கள். நாம் அவற்றை கடைபிடிக்கிறோமா?
மேலை நாட்டு கலாசாரம் என்ற பெயரில் நம் வாழ்க்கைக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து, பாரம்பரிய உணவுகளை கைவிட்டு, பாஸ்ட் புட் உணவுகளை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி நாம் வாழ்வை தொலைத்து வருகிறோம்.
வேண்டாம் இந்த மேலைநாட்டு கலாசாரம். ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற கலாசாரத்தை மூட்டை கட்டி மேலை நாட்டுக்கே அனுப்புவோம்.
நிலம், நீர்,காற்று ஆகியவை மாசுபடாமல் பாதுகாப்போம். இயற்கையை நேசிப்போம், இயற்கை உரங்களையே பயன்படுத்துவோம்.

0 comments

Post a Comment