Pages

Saturday, May 24, 2014

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவர்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், மாற்றத்தைக் கொண்டு வந்த தேர்தல் மட்டுமல்ல. பல கட்சிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்ட தேர்தலும்கூட.
மோடியின் வீச்சு இந்தியா முழுவதும் இருந்தாலும் - சம்மு காசுமீருக்குள்கூட நுழைந்து விட முடிந்தாலும் - தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகியவை மோடிக்கு மழை மறைவுப் பிரதேசங்களே.
எந்தெந்த மாநிலங்களில் ஆற்றல் சான்ற தலைமைகள் இருந்தனவோ, அங்கேயெல்லாம் மோடியால் ஊடுருவ முடியவில்லை.
தமிழ்நாட்டில் சாதியின் பேரால் ஒரு தொகுதியையும், மதத்தின் பேரால் ஒரு தொகுதியையும் கைப்பற்றியதைத் தவிர, மற்ற அனைத்துத் தொகுதிகளையும் அண்ணா தி.மு.க. கைப்பற்றி விட்டது.
கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியிலிருந்த காங்கிரசுக்குக் கூட்டுச் சேர ஆள் கிடைக்கவில்லை. அதைவிடக் கொடுமை போட்டியிடுவதற்கே ஆள் கிடைக்கவில்லை என்பதுதான். நகர்மன்றத் தேர்தலுக்குத் தயாரித்து வைத்திருந்த வேட்பாளர் பட்டியலைப் பாராளுமன்றத் தேர்தலுக்கு அறிவித்து விட்டார்கள்.
பெரும் பதவிகளில் காலமெல்லாம் இருந்து செழித்துக் கொழித்த ப.சிதம்பரம், வாசன், தங்கபாலு போன்றவர்களெல்லாம் இளைஞர்களுக்கு வழி விட்டே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இனிமேல் காங்கிரசில் ஒன்றுமே இல்லை என்று தெரிந்த பிறகுதான் தாங்கள் முதுமை அடைந்து விட்டதே அவர்களுக்குத் தெரிய வந்தது.
குளம் வறண்டு விட்ட பிறகு கொக்குகளுக்கு என்ன வேலை? மணிசங்கர ஐயர் மிகவும் படித்த, ஆனால் நடப்புத் தெரியாத மக்கு ஐயர். காங்கிரசு மேல் இருந்த அளப்பரிய காதலால், தேர்தலில் போட்டியிட்டு, இப்போது வேட்டியைக் காணோமே என்று தேடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கட்சியிலும் வெற்றி பெறுவதற்கு அலைவார்கள். ஆனால் காங்கிரசில் வைப்புத்தொகைக்கு அலைய வேண்டியதாகி விட்டது.
இந்தியா முழுதும் போட்டியிட்டுக் காங்கிரசு வெற்றி பெற்ற இடங்கள் நாற்பத்தி நான்கு. மாநிலக் கட்சியான அ.இ.அ.தி.மு.க. பெற்ற இடங்கள் முப்பத்தி ஏழு. தேசியக் கட்சிக்கும் மாநிலக் கட்சிக்கும் உள்ள இடைவெளி வெறும் ஏழுதான். ஒரு முழுமையான அதிகார பூர்வமான எதிர்க்கட்சி என்னும் நிலையைக்கூட எட்ட முடியவில்லை. ஏதோ கேரளாவில் கொஞ்சம் கருநாடகத்தில் கொஞ்சம் தமிழ்நாட்டில் முட்டை என்று கேவலப்பட்டு இன்னொரு பிராந்தியக் கட்சியாகி விட்டது காங்கிரசு.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல, நாற்பது ஆண்டுகளாகக் கேட்பதும் அடங்கி விடுவதுமாக இருந்த தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்குவதற்கு, முழு சீமாந்தராவின் பகையையும் தேடிக் கொண்டீர்கள். சீமாந்தராவில் காங்கிரசு வேரும் வேரடி மண்ணுமில்லாமல் பிடுங்கி எறியப்பட்ட பிறகும், தெலுங்கானாவாவது நன்றி பாராட்டியதா?
எந்த சந்திரசேகர் தெலுங்கானாப் பிரிவினைக்குப் பிறகு காங்கிரசில் இணைந்து இரண்டறக் கலந்து விடுவதாகச் சொன்னாரோ, அந்த சந்திரசேகர் காங்கிரசோடு கூட்டு வைத்துக் கொள்ளக் கூட அஞ்சி விலகி ஒடிப் போய் விட்டாரே! தன்னுடைய முதலமைச்சர் கிரண் ரெட்டியை வெளியேற விட்டுவிட்டு, எதிரிகளான சந்திரபாபு நாயுடுவையும், சந்திரசேகரையும் முதலமைச்சர்களாக வழி வகுத்தது எந்த வகையில் அறிவான செயல்?
அதுபோல் "கச்சத்தீவைக் கொடுத்தது கொடுத்ததுதான், மீனவர்களைக் கச்சத்தீவுக்கு இந்தப்பக்கமே மீன்பிடித்துக் கொள்ளச் சொல்லுங்கள், ஒருவேளை இந்தப் பக்கத்தில் மீன்பாடு இல்லையென்றால், மீனவர்களைக் கத்திரிக்காய் பயிரிட்டுப் பிழைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என்றெல்லாம் பேசியவர்கள் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட நினைத்ததே நெஞ்சூக்கம் மிக்க செயல்தானே?
கொடுமை செய்கிறபோதெல்லாம் கூட இருந்து விட்டு, பதவிகளை எல்லாம் பங்கிட்டுக் கொண்டு விட்டுக் கடைசியாக "அவன்தான் நானில்லை' என்று காங்கிரசை உதறி விட்டால் தப்பித்துக் கொண்டு விடலாம் என்று தி.மு.க. கருதியதற்கு வழங்கப்பட்ட தீர்ப்புத்தான் மொத்தமாக அது துடைத்தெறியப்பட்ட நிலை.
மாற்றம் என்பது கூட்டணித் தலைமையை ஒழித்துக் கட்டுவது மட்டுமல்ல; அதனோடு கைகோத்து அதனுடைய செயல்களனைத்திற்கும் துணை நின்ற கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான்.
உத்தரப் பிரதேசத்தில் ஓரிடத்தில்கூட வெல்ல முடியாமல்போன மாயாவதி, "இது நாள் வரை காங்கிரசு ஆட்சியை நிலை நிறுத்தியதற்கு மக்கள் கொடுத்த தண்டனை இது' என்றார்
அதே நிலைதான் முலாயம்சிங், லல்லு பிரசாத் யாதவ், நிதிசுகுமார் ஆகிய அனைத்துத் தலைவர்களுக்கும்.
காசுமீர் தோன்றிய காலத்திலிருந்து நேற்று வரை மூன்று தலைமுறைகளாக ஆட்சி பீடத்திலிருக்கும் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா காங்கிரசின் தோழமை காரணமாகக் காணாமல் போய்விட்டாரே.
அனைத்து மாநிலங்களிலும் முதுகெலும்பற்ற தலையமைச்சர் மன்மோகன்சிங்கை வைத்துக் கொண்டு நாட்டைப் பாழாக்கி விட்ட காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் வெறி கொண்டு எழுந்தபோது, மாற்று மோடிதான் என்று கருதினார்கள்.
ஆனால் எங்கெல்லாம் காங்கிரசு எதிர்ப்பில் மாநிலத் தலைமைகள் வலுவாக இருந்தனவோ, அங்கெல்லாம் மோடி தேடுவாரற்றுப் போய்விட்டாரே.
தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும், செயலலிதாவையும், மம்தா பானர்சியும், நவீன் பட்நாயக்கையும் முழுதாகத் தேர்வு செய்த மக்கள், மோடியையும், மோடியோடு சேர்ந்தவர்களையும் முற்றாகத் துடைத்தெறிந்து விட்டார்களே.
கூட்டணிகளை அமைப்பதற்குள் கருணாநிதி தரப்பும், மோடிதரப்பும், வாசன் தரப்பும் பட்டபாடு இருக்கிறதே... விசயகாந்த் இவர்களை எல்லாம் ஒரு வழி செய்து விட்டார். அவர் சிங்கப்பூருக்குப் போனால் பின்னாலேயே சிங்கப்பூருக்குப் போனார்கள். சிங்கப்பெருமாள்கோயிலுக்குப் போனால் இவர்களும் அங்கே போனார்கள்.
தேர்தல் முடிவில் தி.மு.க.வுக்கு ஒரு முட்டை, தே.மு.தி.க.வுக்கு ஒரு முட்டை, ம.தி.மு.க.வுக்கு ஒரு முட்டை, பொதுவுடைமைக் கட்சிகளுக்கு ஒவ்வொரு முட்டை, காங்கிரசுக்கு ஒரு முட்டை, தமிழ்நாட்டு அரசியல், முட்டைகளின் அரசியலாகி விட்டது.
பொதுவுடைமைக் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்ந்து பதினெட்டு இடங்களில் நின்று, ஒவ்வொன்றும் இரண்டு இலட்சம் வாக்குகள் பெற்றிருக்கின்றன. அரை விழுக்காடு இனி எந்தத் தலைவரும் கூட்டணியில் இடம் தர மாட்டார்கள். இதயத்தில் மட்டுமே இடம் தருவார்கள். தோற்கவே கூடாத ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். நோய் என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
காங்கிரசுக்குக் கிடைத்த வாக்கு வெறும் பதினேழு இலட்சம் (4.3%). முன்பு பாரதிய சனதா இருந்த இடத்திற்குக் காங்கிரசு வந்து விட்டது. இப்போது இது தீட்டுக் கட்சி ஆகி விட்டது
பத்து விழுக்காடு வாக்கு வங்கியைப் பெற்றிருந்த தே.மு.தி.க. ஒரு கூட்டணிக்குத் தலைமை பெற்றும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதன் வாக்கு வங்கி பாதியாக (5.15%) குறைந்து விட்டது பா.ம.க.வும், பாரதிய சனதா கட்சியும் வாக்கு வங்கியில் தே.மு.தி.க.வுக்கு ஏறத்தாழ சமம் என்று ஆகி விட்டது. பதினான்கு இடங்களில் போட்டியிட்டும், ஏழு இடங்களில் போட்டியிட்ட பாரதிய சனதாவை விடக் குறைத்து வாங்கினால், எப்படி முதலமைச்சராக முடியும்?
அ.இ.அ.தி.மு.க. பெற்ற வாக்குகள் ஒன்றே முக்கால் கோடி (44.3%). திமுக பெற்ற வாக்குகள் தொன்னூற்று இரண்டரை இலட்சம் (23.4%). அ.இ.அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் ஏறத்தாழப் பாதியாகி விட்டது. இப்போதே அணி சேர ஆள் கிடைக்கவில்லை. வருங்காலத்தில் இப்போதிருக்கும் கட்சிகளும் வேறு மேய்ச்சல் நிலம் தேடும்.
ஆ. ராசா, டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் அரசியலை மூலதனமாகக் கொண்டு வாரிச் சுருட்டியதை ஏன் தடுக்கவில்லை என்பதுதான் காங்கிரசின் மீதிருந்த மிகப் பெரிய குற்றச்சாட்டு.
காங்கிரசின் பாவ மூட்டைகளில் பாதி தி.மு.க.வின் பங்களிப்புத்தானே?
மக்கள் இவற்றையெல்லாம் மறந்துவிட வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்தானால், இவர்களை ஒரேயடியாகக் கைகழுவி இருக்க வேண்டும் அல்லது இவர்களெல்லாம் சீதையைப் போல் தீயில் குளித்து வெளிவரட்டும் என்று நீதிமன்றத் தீர்ப்புவரை காத்திருப்போர் பட்டியலிலாவது வைத்திருக்க வேண்டும்.
கருணாநிதி என்ன காமராசரா என்ற கேள்வி எழுமானால், அவர் கருணாநிதியாகவே நடந்து கொள்வதென்றாலும், இவர்களையெல்லாம் வெளிக்காட்டாமல் மூடியாவது வைத்துத் தந்திரமாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களையே வேட்பாளர்களாக்கி தி.மு.க. தேர்தலை எதிர்கொண்டது மிகவும் முரட்டுத்தனமானது. இதன் மூலம் கருணாநிதி மக்களுக்குச் சொன்ன செய்தி: குடியாட்சி முறையில் ஊழலெல்லாம் ஒரு பொருட்டில்லை.
மக்கள் கருணாநிதிக்கு வாக்குப்பெட்டி வழியாக அளித்த மறுமொழி: ஊழல் குடியாட்சி முறையையே அரித்து விடும். அப்புறப்படுத்த வேண்டியது இவர்களை மட்டுமல்ல, இவர்களை வெட்கமில்லாமல் வெளிப்படையாக நிறுத்திய தி.மு.க.வையும்தான். கருணாநிதி அவர்களே, நல்ல வேளை ஞாபகப் படுத்தி
னீர்கள்.
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டு விட்டார் கருணாநிதி.

0 comments

Post a Comment