Pages

Saturday, May 24, 2014

நீர்நிலைகளைப் பாதுகாக்க தனி துறை

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாத நிலையில், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் தமிழகம் மீண்டும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கோடைகாலத்தில் குளங்கள், கிணறுகளில் இருக்கும் தண்ணீரும் வறண்டு, நதிகள் மணற்பாங்காய் காட்சி தருகின்றன.
தமிழகம், தனது தண்ணீர் தேவைகளுக்காக ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு நாம் நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க தவறியதே காரணம்.
ஆறுகள், கால்வாய்கள்தான் நிலத்தடி நீரின் ஆதாரம் என்ற நிலையில் ஆறுகளையும், குளங்களையும், ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
குளங்கள், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றங்களின் உத்தரவுகள் ஏட்டளவில்தான் இருந்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய குளங்களால் பாதிக்கப்பட்டது விவசாயம் மட்டுமன்றி குடிநீர் ஆதாரங்களும் தான் என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மொத்த மழையளவு 923.1 மில்லி மீட்டர். ஆனால், கிடைக்கும் மழை நீரை சேகரிக்கும் இயக்கம் என்பது அவ்வப்போது வந்து போகும் மழை போன்று மாறிவிட்டது. ஏரிகளும், குளங்களும் மணல் மேடுகளாய் மாறியுள்ள நிலையில், மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் அவை வீணாக கடலுக்குள் சென்று கலக்கின்றன.
அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே அவற்றின் நீர்மட்டம் குறைந்து மணல் பரப்பு தெரியத் தொடங்கி விடுகிறது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அணைகளில் தண்ணீருக்கு பதில் மணல் கொள்ளளவு அதிகரித்து
உள்ளது.
ஆறுகளில் நீர்மட்டம் குறைவதால் புதிய பிரச்னைகளும் எழுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட கடலோர கழிமுக பகுதிகளில் நன்னீர் உப்புநீராக மாறி குடிநீருக்கு பயனற்றதாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நகர, கிராமப் பகுதி ஏரிகள், குளங்கள், தண்ணீர் வரத்து வாரிகள் என 36 ஆயிரத்துக்கும் மேல் இருந்தன. இவை அனைத்தும் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருந்ததால் பருவமழை பெய்யும் காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி வறட்சி காலத்தில்கூட விவசாயிகளும், கால்நடைகளும், பொதுமக்களும் பெரிதும் உதவின.
மேலும் ஏரிகள், குளங்கள் குட்டைகள், ஊருணிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் மரங்கள் வளர்ந்த தமிழகம் பசுமை பூமியாகவே திகழ்ந்தது. விவசாயக் கிணறுகள் வீடுகளில் இருந்த குடிநீருக்கான உரக்கிணறுகளில் கூட மீன் வளர்ந்தது. தண்ணீர் வரத்து வாரிகளாலும் ஆறுகள் மற்றும் காட்டாற்று ஓடைகளின் ஓரங்களிலும் மரங்கள் தானாகவே வளர்ந்திருந்ததால் பருவ மழை சரியாக பெய்தது.
ஆனால், இன்று தமிழகத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல ஊர்களில் குளங்கள், வரத்துவாரிகள் இருந்த சுவடே இல்லை. இதேநிலை தொடர்ந்தால் வறட்சியால் பசி, பட்டினி, பஞ்சம் இவையெல்லாம் தவிர்க்க முடியாததாகி விடும்.
வறட்சியில் இருந்து தமிழ்நாட்டை காத்து நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவும் விவசாயம் செழித்திடவும், நிலத்தடி நீரைப் பாதுகாத்திட கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய வருவாய்த் துறை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள், வரத்து வாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்து அளந்து, ஆக்கிரமிப்புளர்களிடமிருந்து அவற்றை மீட்டு, தூர்வாரி பாதுகாத்து பராமரித்து முறையாக தண்ணீர் தேங்கிட வழி செய்து மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் உண்மையான பசுமைப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.
நீர்நிலை பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு அதற்கென தனித் துறை அமைத்து கடும் நடவடிக்கை எடுத்து துரிதமாக செயல்படுத்தினால் தமிழக மக்கள் வாழும் தலைமுறை மட்டுமின்றி, அடுத்த தலைமுறையும், தமிழக முதல்வரை வாழ்த்தி, வணங்கி மகிழும்.

0 comments

Post a Comment