பதினாறாவது பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வெற்றி பெற்றவர்கள் மக்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்க உள்ளார்கள்.
மக்களவையின் லட்சியம் தெளிவானது. ஆனால் அதன் பார்வையும் பயணிக்கும் திசையும் மாறி வருகிறது. நடைபெறும் விவாதங்களின் தரம் தாழ்ந்து வருகிறது. மக்களவை நடைபெறும் நாள்களைவிட, ஒத்திவைக்கப்படும் நாள்களே அதிகம் எனத் தோன்றுகிறது. கூச்சல், குழப்பம், வரம்பு மீறிச் செயல்படுதல் இவையெல்லாம் நாளும் நடைபெறும் நிகழ்வுகள். "தேசமே உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தயவு செய்து இப்படிச் செயல்படாதீர்கள்' என்று சபாநாயகர் அறிவிப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
இதனை எதிர்பார்த்ததால்தானோ என்னவோ அரசியல் நிர்ணய சபையின் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்,"சட்டத்தைச் செயல்படுத்தும் நிர்வாகிகளுக்கு உயர்கல்வித் தகுதியை நிர்ணயிக்கும்போது, சட்டத்தையே உருவாக்கும் நபர்களுக்கு (எம்.பி. / எம்.எல்.ஏ.) எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை என்பது விசித்திரமாக இல்லையா' எனக் கேட்டார். கல்வித் தகுதி என்ற தடைக் கல்லைப் போட்டு, சாதாரண மக்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திற்கு வருவதைத் தடுப்பது உயர் ஜனநாயக நெறியல்ல என பெரும்பாலோர் கருதியதால், சட்டத்தை உருவாக்குவோருக்கு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படவில்லை.
இருப்பினும் முதல் மக்களவையில் (1952-1957) மெட்ரிகுலேஷன் கல்வித் தகுதி பெறாதவர்கள் 23.2 விழுக்காட்டினர் மட்டுமே; மற்றவர்களில் பெரும்பாலோர் தியாகிகள், தேசபக்தர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், மேதைகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள்.
அவர்கள் தங்கள் தங்கள் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர்களே. ஆனாலும் அவர்கள் தங்களின் மாநில உணர்வை தில்லிக்குக் கொண்டு வரவில்லை. மாறாக தேசிய உணர்வோடு வந்தார்கள்; தேசியச் சிந்தனையோடு செயல்பட்டார்கள். மொழி, இனம், மதம், மாநிலம் ஆகிய எல்லைகளைத் தாண்டி தேசநலனை முன்னிறுத்தியே செயல்பட்டார்கள். நமது ஜனநாயகத்தின் வெற்றிக்கு இதுவே ஆதார சுருதி; அடிப்படை. மாநில நலனும், தேச நலனும் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல. ஆகவே மாநில நலனை புறந்தள்ளாமல், தேசிய நலனைப் பேணுகின்ற அணுகுமுறையை - நமது முன்னோர்கள் காட்டிச் சென்ற வழியை - மக்களவையின் புதிய உறுப்பினர்கள் கடைப்பிடிப்பது தேச நலனுக்கு உகந்தது.
"நாடாளுமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிவது என்பது, ஐந்து ஆண்டுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்திலும் ஐந்து ஆண்டுகள் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படிப்பதற்கு சமம்' என்று ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார் ஈ.வெ.கி. சம்பத். ஆகவே மக்களவைக்குச் செல்லும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கல்லூரிக்குச் செல்வது போல் பக்தியோடும் இதய சுத்தியோடும் செல்ல வேண்டும். அங்கே கற்றுக் கொள்வதற்கும், பரந்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"மற்ற உறுப்பினர்களின் பேச்சுகளைக் கேட்பதில் ஆர்வக் குறைவு, சகிப்புத் தன்மை இல்லாமை ஆகிய பண்புகள் நல்ல உறுப்பினர்களுக்கான தகுதிகள் அல்ல' என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திரஜித் குப்தா.
ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் என்பது அவையின் மிக முக்கியமான நேரம் ஆகும். தன் தொகுதி, மாநிலம், திட்டங்கள் தொடர்பான விவரங்களை கேள்விகள் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ள இது வாய்ப்பளிக்கும். இதனை முறையாகப் பயன்படுத்த ஒவ்வொரு உறுப்பினரும் முயற்சிப்பார்கள். பண்டித நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில், நாள்தோறும் கேள்வி நேரத்தில் தவறாது அவையில் இருப்பார். தன் அமைச்சகம் தொடர்பான கேள்விகள் இல்லை என்றாலும், அவையில் அமர்ந்திருப்பார். பிற அமைச்சர்களின் கேள்விகளுக்கு, அவசியம் ஏற்பட்டால் தானே எழுந்து பதிலும் தருவார்.
1960-70 கால கட்டத்தில் கேள்வி நேரம் 14% நேரத்தை எடுத்துக் கொண்டது. 2001-05இல் கேள்வி நேரம் 11.8% ஆகக் குறைந்துவிட்டது. பண்டித நேரு பிரதமராகப் பதவி வகித்தபோது, நாள் தோறும் தவறாமல் வருகை தருவார் என்பதால் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுவார்களாம். நேருவின் காலம் மீண்டும் திரும்ப வேண்டும்; கேள்வி நேரம் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
முதல் மக்களவையில் (1952-57), சட்ட மசோதாக்களின் மீதான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம்: 49%; அது 1991-96இல் 22.16 சதவீதமாகக் குறைந்தது. அதற்குப் பின்பு இன்னும் விவாத நேரம் குறைந்திருக்கலாம். சில அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீடு, விவாதம் ஏதும் இன்றியே செய்யப்படும் நிலை வந்துவிட்டது. அதை விட சில முக்கியமான சட்ட மசோதாக்கள் கூட, விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படுகின்றன. "இத்தகைய நிலையை நேரு அனுமதிக்க மாட்டார்' என்கிறார் புகழ்பெற்ற முன்னாள் உறுப்பினர் இந்திரஜித் குப்தா. நேரு உருவாக்கிய "மரபை' நாம் கட்டிக் காக்க வேண்டுமல்லவா?
""ஒருமுறை நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. கடுமையான வாக்குவாதம். எதிர்த்தும், மறுத்தும் பேசுகிறார் மகாவீர் தியாகி. கோபமடைந்த நேருஜி சொல்லுகிறார்: "கட்சியின் தலைவர் என்ற முறையில் சொல்லுகிறேன்: மகாவீர் தியாகி! அவையை விட்டு வெளியேறுங்கள்'. உடனே "தியாகி' பட்டெனப் பதில் சொல்லுகிறார்: "ஜவாஹர்லால்! தலைவரை உருவாக்குபவன் என்ற முறையில் சொல்லுகிறேன்; நீங்கள் சபையை விட்டு வெளியேறுங்கள்' இந்த இடிமுழக்கத்தைக் கேட்டவுடன் நாடாளுமன்ற மாடம் இடிந்து விழுந்து விடுமோ என நாங்கள் பயந்தோம். ஆனால் என்ன ஆச்சரியம்! கூட்டம் முடிந்தவுடன் நேருவும் தியாகியும் கை குலுக்கிக் கொண்டார்கள். அன்புடன் அளவளாவினார்கள்.
இதைவிட அதிசயம், அடுத்த சில நாள்களில் அமைச்சர் பதவியில் இருந்த "தியாகி'யின் "ரேங்க்' உயர்த்தப்பட்டது. இதுதான் எதிர் வாதங்களை ஏற்றுக்கொள்ளும் நேரு பெருமகனின் பெருந்தன்மை! சகிப்புத் தன்மை!' என வியந்து பாராட்டுகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.என். மிஸ்ரா. நேருவின் கடல் போன்று பரந்த பெருந்தன்மையில், கை அளவாவது நாம் அள்ளிக் கொள்ள வேண்டுமல்லவா?
நேரு பிரதமராகவும், மாவ்லங்கர் சபாநாயகராகவும் இருந்த கால கட்டம். மக்களவை நடந்து கொண்டிருக்கிறது. நேரு சபாநாயகருக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார். அதில் "உங்களிடம் ஒரு அவசரமான வேலை உள்ளது. என்னுடைய அறைக்கு நீங்கள் வர இயலுமா?' - எனக் கேட்கிறார் நேரு. அதே குறிப்புத் தாளில் சபாநாயகர் திருப்பி எழுதுகிறார்: "சபைத் தலைவர் பிரதமர் அறைக்குச் செல்வது மரபு அல்ல. உங்களுக்கு அவசர வேலை இருந்தால், நீங்கள் என் அறைக்கு வருவதை வரவேற்கிறேன்' என பதில் தந்தார்!
அந்தப் பதிலைப் படித்த பண்டித நேரு பதற்றத்துடன் "நான் ஒரு பெரிய தவறை அறியாமல் செய்து விட்டேன்; அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்; உங்கள் அறைக்கே நான் வருகிறேன்' எனத் திரும்ப எழுதினார்!
சபாநாயகரின் கருத்தையும், சபையின் மரபையும் மதித்த அன்றைய பண்டித நேரு எங்கே? "தயவு செய்து அமருங்கள்' என்று பல முறை சபாநாயகர் வேண்டி விரும்பிக் கேட்டும், அதனைக் காதில் போட்டுக் கொள்ளாத இன்றைய உறுப்பினர்கள் எங்கே?பண்டித நேருவும் பிற மூத்த தலைவர்களும், முன்னாள் உறுப்பினர்களும் நல்ல நாடாளுமன்ற மரபுகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அவை மலையளவு உயர்ந்தவை. அவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள இடங்கள் 336. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெற்ற இடங்கள் 59. அ.தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகள் பெற்ற இடங்கள் 148. ஆனால் முதல் பொதுத் தேர்தலில் (1952-57) காங்கிரஸ் மட்டுமே பெற்ற இடங்கள் 364. இதரக் கட்சிகள் பெற்ற இடங்கள் 125 மட்டுமே. அன்று காங்கிரஸ் வலுவாக நின்றது. பிற கட்சிகளோ வலுவிழந்து நின்றன.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பொறுப்புகளை காங்கிரûஸச் சேர்ந்த பெரோஸ் காந்தி போன்ற உறுப்பினர்களே ஏற்றுக் கொண்டார்கள். முந்த்ரா பங்கு விற்பனை ஊழலை எழுப்பியவர் பெரோஸ் காந்தி. அதன் விளைவாக நேருவின் நெருங்கிய நண்பரான டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேர்ந்தது. அதன் பின்பு காங்கிரஸ் மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய குற்றச்சாட்டின் காரணமாக நேருஜி நெஞ்சார நேசித்த நண்பர், ஆலோசகர் வி.கே. கிருஷ்ண மேனனும் பதவி விலகுவதற்கு நேரு சம்மதம் தந்தார்.
இவ்வாறு எதிர்க்கட்சிகள் பலம் குன்றிய காலகட்டத்தில், ஆளும் கட்சி உறுப்பினர்களே எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்ட முன் உதாரணம் உள்ளது. அத்தகைய முன் உதாரணத்தை பொறுப்பேற்க உள்ள புதிய கட்சி கடைப்பிடிக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் சர்ச்சைக்குரிய மசோதாக்கள், பிரச்னைகள் எழுந்தால், நேரு சர்வகட்சித் தலைவர்களை அழைப்பார். கலந்து பேசி கருத்தொற்றுமையை உருவாக்குவார். அதன் பயனாக பிரச்னைகள் தீர்ந்தன. மசோதாக்கள் இலகுவாக நிறைவேற்றப்பட்டன. இத்தகைய நல்ல அணுகுமுறையை- நேரு அறிமுகப்படுத்திய கருத்தொற்றுமை அணுகுமுறையை - புதிய அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
நாடாளுமன்ற நடைமுறைகளை, நெறிமுறைகளை, மரபுகளை அன்றைய நம் தலைவர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மரபுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்; மக்களவையின் மாண்பு
காக்கப்பட வேண்டும்!
0 comments
Post a Comment