Pages

Tuesday, May 20, 2014

எச்சரிக்கை மணிகள்

essayஇரு நாடுகளுக்கிடையேயோ அல்லது இரு இனங்களுக்கிடையேயோ பிரச்சினைகள் , முரண்பாடுகள் எழும்



போது,அவற்றைத் தீர்க்க இரு வழிகள் கையாளப்படுகின்றன. ஒன்று வலிமையான தரப்பு பலவீனமான தரப்பின் மீது ஒடுக்குமுறைகளைப்  பிரயோகிப்பதன்  மூலம்  அதை அடக்கி, செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளி ஒரு தற்காலிகமான அமைதியை நிலைநாட்டுவது. 




இது உடனடியாகச் சில சாதகமான பலன்களைக் கொடுக்குமாயினும், போதும்  நீண்டகால அடிப்படையில் கடுமையான  எதிர்விளைவுகளையே  ஏற்படுத்தும். அடுத்தது பிரச்சினைகளுக்கான மூல காரணங்கள் திறந்த மனதுடன் அணுகப்பட்டு அவற்றைக் களைவதன் மூலம் ஒரு நிரந்தரமான  சமாதானத்தை ஏற்படுத்துதல். இதன் மூலம்  பிரச்சினைகளும்  முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டு  ஒரு வலுவான,  மீண்டும் பிரச்சினைகள் தோன்ற முடியாத நல்லிணக்கச் சூழலை ஏற்படுத்துவதாகும்.

ஆனால்  அதிகார பலம் கொண்ட  வலிமையான தரப்பினர், பெரும்பாலும்  முதலாவது வழியையே தெரிவு செய்கின்றனர். ஒடுக்குமுறைகளைப் பல்வேறு முனைகளிலும் விரிவுபடுத்துவதன் மூலம்  பிரச்சினை தீர்க்கப்படாமலே அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். இப்படியான ஒரு அமைதி, நீறுபூத்த நெருப்பு என்பதை அவர்கள் உணர்ந்திருந்த போதும், அதை ஏற்றுக்கொள்ளப் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை  ஆரம்பித்த காலம் தொடக்கம்  இன்று வரை மாறி மாறி ஆட்சிக்கு வரும்  அரசாங்கங்கள் இதே வழிமுறைகளையே கைக்கொண்டு வருகின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ, ஒப்பந்தங்கள் மூலமாகவோ இனப்பிரச்சினைக்குத்  தீர்வு காணக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும்  அவற்றை ஆட்சியாளர்களே வலிந்து குழப்பி வந்திருக்கின்றனர்.
இன்னொரு புறம் இனக் கலவரங்கள் என்ற பெயரில் இன அழிப்பு நடவடிக் கைகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமும்  பல்வேறு விதமான இராணுவ நடவடிக்கைகள்  மூலமும் ஒடுக்கு முறை கள்  மூலமும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிட முயன்று வந்துள்ளனர். இதன் காரணமாகவே சாத்வீக வழியில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டப் பாதை யைப் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட் டது. குறிப்பாக 1983 இனக் கலவரம் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள்  இனப் பிரச்சினைக்குத் தீர்வு சாத்தியமில்லை என்பதைத் தமிழ் மக்களுக்குத் திட்ட வட்டமாக உணர்த்தியது.
அதன் காரணமாகவே தமிழர்களின் உரிமைப் போராட்டத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமாக ஆயுத வடிவில்  பெரிய போராக விரிவடைந்திருந்தது. இலங்கையின்  அதிகாரத்திலிருந்த எந்த ஓர் ஆட்சிபீடமும்  அந்த நடைமுறை உண்மையை ஏற்கத் தயாராயிருக்க வில்லை. மேலும் மேலும்  ஒடுக்கு முறைகளை வலுப்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளை  ஒரு தலைப்பட்சமாகத் தீர்க்க முயன்றனர். அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவின்  அரசு முன்னைய ஆட்சியாளர்களை விடத் தீவிரமான முறையில்  போரை இன அழிப்புப் போராக முன்னெடுத்தது. பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிரழிவின் மேல் ஏறி நின்று தமிழ் மக்களின்  ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையிலும் கூட  அரசு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு  எந்த வொரு ஆக்கபூர்வமான முயற்சியையும்  எடுக்காமல்  ஒடுக்குமுறைகளை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான்  இலங்கை அரசு போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் கூட, இலங்கை சர்வதேச விசாரணையை  முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி  சர்வதேச விசாரணையில்  சாட்சியங்கள் முன்னிலையாவதற்கான நிலைமைகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டை போடுவதன் மூலம் விசாரணையில்  முழுமையான பலன் வெளிப்படவிடாமல் செய்ய முயன்று வருகிறது.
அதாவது இலங்கை அரசு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் சவால் விடும்  வகையில் தனது நடவடிக்கைகளை  முன்னகர்த்தி வருகின்றது. அதில் பிரதானமானது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்புகளின் அனுசரணையுடன்  விடுதலைப்புலிகள் மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடத்தத் தயாராகி வருகின்றனர் என்ற அரசின் அறிவிப்பாகும்.
அந்த ஒரு மாயையை உருவாக்கி அதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடியவர்களை  அச்சுறுத்தும்  நடவடிக்கைகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
குறிப்பாக காணாமற் போன இளைஞனின் தாயாரான ஜெயக்குமாரி, தேடப்படும் நபரை மறைத்து வைத்தார் என்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றின் முன்வலுவான ஆதாரங்களுடன்  சாட்சியளித்தவராவார்.
மேலும் 65 பேர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி  வெளிவிவகார  அமைச்சர் ஜி. எல்.பீரிஸ்  சர்வதேச விசாரணைக் குழு முன் சாட்சியமளிப்பவர்கள் தேசத் துரோகிகளாகக் கருதப்பட்டு  அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது சர்வதேச  விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பவர்கள்  விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றோ அல்லது தேசத்துரோகிகளென்றோ கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படலாம்.   சில சந்தர்ப்பங்களில்  சாட்சியமளிக்கும் முன்பே கைது செய்யப்படவும் கூடும்.
இதன் மூலம்  இலங்கையில் வசிக்கும் எவரும் சர்வதேச விசாரணைக்குழு முன்பு சாட்சியமளிக்க முடியாதபடி  அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது என்பது தெளிவான விடயமாகும்.
அதேவேளையில் புலம்பெயர் நாடுகளிலுள்ள  16 தமிழ் அமைப்புகளும், 424 தமிழர்களும் பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்தவர்கள் எனக் கூறப்பட்டு இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த அடிப்படையில்  பயங்கரவாதிகளின் சாட்சியங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை அரசு வாதிடலாம். ஆனால் நெடியவனின் விடுதலைப் புலிகள்  என்ற அமைப்பைத் தவிர ஏனைய அமைப்புகள் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கமைய அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்டவை.
அவற்றின் மேல் இலங்கை அரசு விதிக்கும் தடை சர்வதேச  அளவில் செல்லுபடியாகப் போவதில்லை. ஆனால் இலங்கை அரசின்  தான்தோன்றித்தனமான சண்டித்தன நடவடிக்கைகளுக்குப் பதிலடிகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இவை எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்துவிட்டன. புலம்பெயர் நாடுகளில் உள்ள 10 அமைப்புகளைத் தடை செய்தமைக்கு எதிரான பதிலடியை நாடு கடந்த தமிழீழ அரசு உடனடியாகவே கொடுத்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசில் பிரதமராக விளங்கும் உருத்திரகுமாரன்  மேற்படி அமைப்பின்  தலைமையில்  லண்டனில் ஒரு மாநாட்டைக் கூட்டப் போவதாகவும்,  அத்துடன் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களைப் பகிஷ்கரிக்கும் தீர்மானத்தை எடுக்கப் போவதாகவும்  தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்  பொருள்களில் 80 சதவீதமானவை இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் செயற்படும் மேற்கு நாடுகளாலேயே  இறக்குமதி  செய்யப்படுகின்றன. அந்த அமைப்புகள் அந்தந்த நாடுகளில்  அரசியல் ரீதியில் பலம் பெற்றவையாகவும், உள்ளூர் அரசியல்வாதிகளுடனும் , பொதுநிறுவனங்களுடனும்   நல்லுறவைப் பேணி  வருபவையுமாகும்.
  
அது மட்டுமன்றி பலபுலம்  பெயர் தமிழர்கள்  அந்த நாடுகளில்  நாடாளுமன்ற , நகர சபை உறுப்பினர்களாகவும் அங்கு செயற்படும் அரசியல் கட்சிகளின் முக்கிய பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர்.  எனவே புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி அந்த நாடுகளைச் சேர்ந்த பெருமளவு  மக்களும் இலங்கைப் பொருள்களைப்  பகிஷ்கரிக்கும் நிலை தோன்றும்.
இது இலங்கைப் பொருளாதாரத்தில்  பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டுச் சந்தைகளை சீனா, பங்களாதேஷ், மலேசியா ஆகிய நாடுகள் கைப்பற்றிக் கொள்ளும்.
மேற்படி நாடுகள் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பக்கம் நின்றாலும் வர்த்தக நலன்களைப் பொறுத்த வரை தங்கள் நாட்டின் நலன்களை அவை விட்டுக் கொடுக்கமாட்டா. மேலும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, சீனா போன்ற நாடுகள் மிகக் குறைந்த  விலையில் இலங்கைப் பொருள்களைக் கொள்முதல் செய்து தமது பேரில்  ஏற்றுமதி செய்து கொள்ளை லாபமீட்டலாம்.
எப்படியோ, இலங்கை பெரும் அவல நிலையைச் சந்திக்க வேண்டிய நிலை எழும். இலங்கையில் நடக்கவுள்ள ஒரு பொது நிகழ்வில்  கலந்து கொள்ளவிருந்த பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.
இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் சபையின் விசாரணையை நிராகரிப்பதாகத் தனக்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்ததாலேயே தான் இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் இங்கு வரவிருந்த 4 தொழிற்கட்சி  நாடாளுமன்ற  உறுப்பினர்களும் தமது பயணத்தைக் கைவிட்டுள்ளனர்.இலங்கை தனது பொறுப்புக் கூறும் கடமையில்  அக்கறை காட்டாத காரணத்தால் இலங்கையால் தலைமை  தாங்கப்படும்  பொதுநலவாயம் தனது  கடமையிலிருந்து தவறி விட்டதெனக் கூறி கனடா தான் பொதுநலவாயத்துக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்திவிட்டது.
கடல் கடந்த தமிழீழ அரசின் அறிவிப்பு, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை ரத்து. கனடாவின் பொதுநலவாய அமைப்புக்கான நிதி நிறுத்தம் என்பன இலங்கையைக் கடும் தொனியில் எச்சரிக்கும் அடையாளங்களாகும்.
இது இலங்கை தான் வெட்டிய படு குழியில் தானே விழுந்த கதையாகும். தனது அந்தச் சண்டித்தனத்தை சர்வதேச அரங்கிலும் மேடையேற்ற முயன்றதன்  விளை பலன்தான் இவை. இப்போது எச்சரிக்கை மணிகள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இலங்கை அரசு வழமையான பாணியில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவ டிக்கைகளை அதிகரிக்கலாம். எனினும் எல்லாம் ஒன்றுகூடி இலங்கை அரசுக்கு சகிக்க முடியாத  கசப்பான பலன்களை வழங்கும் என்பதில் மட்டும் சந்தேகப்படத் தேவையில்லை.

0 comments

Post a Comment