Pages

Tuesday, June 10, 2014

ஆகாச கங்கையும் அற்புத உரமும்!

பூமியின் பெரும்பங்கு கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் கடல் நீரைக் குடிக்க முடியாது. அதே சமயம் கடல் நீர் வழங்கும் உயிர்க்காற்றாகிய ஆக்சிஜனால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். "நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவனின் குறளுக்குப் புவியியல் அடிப்படையில் "மனிதனை உயிர் வாழவைப்பது கடல்' என்று ஒரு புதிய விளக்கம் கிடைக்கிறது.

கடல் நீரின் ஆவியை சுவாசிக்கலாம். கடல் நீரைக் குடித்து உயிர் வாழ முடியாது. கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் சில அரபு நாடுகளில் கடைப்பிடிக்கப் பட்டாலும், அதன் செயல்பாடு, நிர்வாகம் அவ்வளவு எளிதல்ல. மிகவும் செலவுடைய திட்டம். அது வெற்றிகரமானது அல்ல.

நதிகள், குளங்கள், ஏரிகள் முன்புபோல் தூய்மையானவை அல்ல. ஏரி குளங்களில் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கின்றன. வடக்கே புனித கங்கையிலிருந்து தென் கோடி தாமிரபரணி வரை எல்லா ஜீவ நதிகளின் நீரும், தொழிற்சாலைக் கழிவுநீர் கலப்பதால் விஷமாகிவிட்டது.

குடிநீர்த் திட்டத்திற்குப் பல்லாயிரங் கோடி ரூபாய் பணம் செலவாகும் அதே நேரம், நீரால் ஏற்படும் நோய்ப் பாதுகாப்புக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மருந்துச் செலவு விரயமாகிறது. மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பல்வேறு ஜீவநதிகளில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளிலிருந்து குழாய்கள் மூலம் பலநூறு கி.மீ. தூரம் வரை கொண்டு செல்லப்படுகிறது. அப்படியும் பற்றாக்குறை என்பதால் ஆழுதுளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் உப்பு நீரும் கலந்து விநியோகமாகிறது.

பல கிராமங்களில் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் விநியோகமாகிறது. இப்படிப்பட்ட ஊற்று நீரில் உள்ள நைட்ரேட், ஆர்சனிக், புளோரைடு போன்ற விஷம் புற்றுநோயை ஏற்படுத்தி வருகிறது. இதுநாள் வரை குடிநீர் சுத்திகரிப்பு என்றால் குடிநீர்த் தொட்டியில் குளோரினைக் கலப்பதுதான். நோயைப் பரப்பும் பாக்டீரியா குளோரினால் சாவது இல்லை.

சுத்தமான குடிநீர் என்றால் காசு கொடுத்து வாங்கும் மினரல் வாட்டர்தான் என்ற நிலை வந்துவிட்டது. இன்று மிகவும் லாபகரமான தொழில் மினரல் வாட்டரே. சிறிய ஊர்களில் கூட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்பட்டுவிட்டன.

மொத்தமாக 20 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பெரிய பாட்டில் விலை ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை. வீட்டுக்கு வந்து வழங்கி காலிபாட்டிலைத் திரும்பப் பெறுகிறார்கள்.

மினரல் வாட்டரையும் காய்ச்சிக் குடிக்கும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பூச்சி மருந்து விஷம் இருக்கலாம் என்ற பயம் உள்ளது. இப்படிப்பட்ட மினரல் வாட்டரைவிட சுத்தமான நீர் உள்ளதா என்ற கேள்விக்கு விடைதான், ஆகாச கங்கை.

சென்னை வால்மீ நகரில் வசிக்கும் பொருளியல் - பொறியியல் சமூக விஞ்ஞானி டாக்டர் எஸ். சிவக்குமாரின் தூய்மைக் குடிநீர் நிறுவனத்தின் பெயர்தான் ஆகாச கங்கை. இவர் நவீன பகீரதனாக அவதாரம் எடுத்து ஆகாயத்தில் உள்ள ஈரப்பதத்திலிருந்து குடிநீர் தயாரிக்கும் ஒரு இயந்திரத்தைக் கண்டு பிடித்து மக்களுக்குத் தூய்மைக் குடிநீர் வழங்கிவருகிறார். முக்கியமாக ராணுவத் துறையின் தேவையை ஆகாச கங்கை நிறைவேற்றி வருகிறது.

பஞ்சபூதங்களுள் ஆகாசம் ஒன்று. ஆகாசத்தின் ஈரப்பதம் காற்றில் கலந்துள்ளது. கடல் வெப்பமுற்று வெளியேறும் நீராவி காற்றின் ஈரப்பதத்தால் குளிரூட்டம் பெற்று மழை பெய்கிறது. அதே தத்துவத்தில் ஆகாச ஈரப்பதத்தை குளிர் சாதனப் பெட்டிமூலம் செல்லும் சிறு ரப்பர் குழாயை ஜன்னலுக்கு வெளியே விட்டு ஈரக்காற்று குளிரூட்டம் பெற்றுக் குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்களை ஆகாச கங்கை உற்பத்தி செய்து வருகிறது.

இவ்வாறு தயாரிக்கும்போதே வடிக்கட்டியும் பொருத்தப்பட்டு மிகவும் சுத்தமான குடிநீர் பெறப்படுகிறது. இக்குடி நீரைப் பரிசோதித்ததில் நோய்க் கிருமிகள் இல்லாததும் புலனாயிற்று. நாளொன்றுக்கு 40 லிட்டர் முதல் 100 லிட்டர் வரை கொள் திறனுள்ள இயந்திரங்களை ஆகாச கங்கை நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

கிராமப் புறங்களில் ஏழை எளியவர்களின் தேவைக்காக 500 அல்லது 1000 லிட்டர் கொள்திறனுள்ள நீர் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு ஒட்டன் சத்திரத்திற்கு அருகில் பொருத்தியபோது போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை. நீண்டநேர மின்தடை இடையூறு என்பதால் மரபுசாரா மின்சாரம் பற்றி யோசிக்கப்பட்டது.

சென்னை மாநகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம், கொடுங்கையூர், பெருங்குடி, நெசப்பாக்கம், கோயம்பேடு ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. அவர்களின் சுய தேவைக்காகக் கழிவு நீர்த் தொட்டியிலிருந்து மீத்தேன் எரிவாயு மின்சாரம் உற்பத்தி செய்து வருவதைக் கேள்வியுற்று ஆகாச கங்கைக் குழுவினர் அங்கே சென்று பார்வையிட்டபோது, கழிவு நீரிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு மிகுந்த சேறு (மனித மலத்திலிருந்து பெற்ற திண்மம்) மலையெனக் குவிந்து கிடந்தது.

மீத்தேன் நீக்கப்பட்டதால் அத்திண்மம் அற்புதமான உரம் பயனுறாமல் உள்ளதைப் பார்த்த ஆகாச கங்கைக் குழுவினர் உலர்ந்த திண்மத்தைப் பெற்றுப் பரிசோதனை செய்தபோது விஷக்கிருமிகள் (பயிருக்குத் தீமை செய்யும் நுண்ணுயிரிகள்) இல்லாததும் புலனாகிறது.

சீனாவிலும் மேலை நாடுகளிலும் இது போன்ற திண்மம் விவசாய இடுபொருளாகப் பயனுறும்போது இந்தியாவில் அம்மரபு போற்றப்படுவது இல்லை. எனினும் அம்மரபை மகாத்மா காந்தி உருவாக்கியதை நினைவில் கொள்ளலாம்.

மகாத்மா காந்தியும் ஜே.சி. குமரப்பாவும் இணைந்து உருவாக்கிய பல்வேறு கதர் - குடிசைத் தொழில் நிர்மாணத் திட்டங்களில் மனித மலத்தை கம்போஸ்டாக மாற்றும் வார்தா கழிப்பிடமும் ஒன்று.

சுமார் 1 1/2 அடி அகலம், 3 அடி ஆழம், 10 அடி நீளத்திற்குக் குழி எடுத்து அதன் ஒரு ஓரத்தில் உட்காருவதற்கு ஏற்பக் கதவு கொக்கியுடன் மரச்சட்டங்களும் துத்தநாகத் தகடும் கொண்ட ஊர்தி வடிவமைக்கப்பட்டது. கீழே உருளைகள் பொருத்தப் பட்டதால் குழி நிறைந்ததும் 2 அடிக்கு ஊர்தி நகற்றப்படும்.

பின் துர்நாற்றம் வீசாமல் இருக்க குவித்து வைக்கப்பட்ட மண்ணை இட்டு மூடவேண்டும். உமியும் இடலாம். ஓராண்டு மக்கியபின்பு காய்கறித் தோட்டத்திற்கும், திராட்சைத் தோட்டத்திற்கும், நெல் - கோதுமை வயல்களுக்கும் வழங்கப்படும். மகசூலும் நிறையக்காணும். காலப்போக்கில் இந்த உலர்நிலைக் கழிப்பிடம் வழக்கொழிந்து விட்டது.

மக்கள் தொகை மிகுந்து குடியிருப்புகள் நெருக்கமான சூழ்நிலையில் வார்தாக் கழிப்பிடம் வழக்கொழிந்து போனதில் வியப்பில்லை. அதே சமயம் வார்தா கம்போஸ்டும், கழிவு நீர் வடிகால் வாரியத்தின் திண்மமும் ஒன்றுதானே!

சென்னை நகரில் வாழும் கோடிக்கணக்கான குடியிருப்புகளின் டாய்லெட் குளியலறைக் கழிவுநீர் குழாய் வழியே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அடைந்து மீத்தேன் எரிவாயு மின்சாரம் எடுத்துவிட்டு மிகுந்தவை சுழற்சி செய்து சுத்திகரிப்பு என்ற பெயரில் கூவத்தில் சங்கமமாகிறது. திண்மங்கள் வெளியேற்றப்பட்டு குவியலாக உள்ளன.

இவற்றை வேகமாக அப்புறப்படுத்துவதின் மூலமே கழிவு நீர் சுத்திகரிப்பு அர்த்தமுள்ளதாயிருக்கும். மழைக் காலங்களில் கேட்கவே வேண்டாம். எந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மே சிறப்பாக இயங்க வேண்டுமோ அங்கு இயங்குவதாகத் தெரியவில்லை.

அப்படிச் சிறப்புடன் இயங்க திண்மங்கள் அள்ளப்பட்டு இயற்கை உரமாக மண்ணில் பயனுற்று மகசூல் உயரவேண்டும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் மேட்ரோக் குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாரியத்தின் அனுமதியுடன் குவிந்து கிடக்கும் திண்மங்களைப் பக்குவப்படுத்தி மூட்டைகளாகக் கட்டி "பாரத் உயிர்த்திண்மம்' என்ற பெயரில் ஆகாச கங்கை நிறுவனம் டன் ரூ.2,000 விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு வழங்க முன்வந்துள்ளது.

மெட்ரோ வாட்டர் கழிவு நீர்க்குழாயில் தொழிற் சாலைக் கழிவுகள் கலக்காத காரணத்தினால் உயிரித் திண்மத்தில் கடின தாதுக்களான கோபால்ட், நிக்கல், குரோமியம் இல்லை என்பதும், நைட்ரஜன் அளவு தொழு உரத்தில் உள்ள அளவைவிட 4 முதல் 5 மடங்கு கூடுதலாயுள்ளதும் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மாதிரிக்கு ஒரு காய்கறித்தோட்டத்தில் உயிரித் திண்மத்தைப் பயன்படுத்தியபோது உயர்ந்த மகசூல் பெறப்பட்டது. உயிரித் திண்மத்தில் மீத்தேன் நீக்கப்பட்டுள்ளதால் பயிரின் நுண்ணிய வேர்கள் உரம் அனைத்தையும் ரசாயனமாக வேகமாக கிரகித்துப் பசுமை வழங்கியதையும் பதிவு செய்துள்ளனர். சில தனிப்பட்ட நல்ல முயற்சிகளை அற்புதம், அதிசயம், ஆச்சரியம் என்று ஒருநாள் வெளியிடும் ஊடகச் செய்திக்குப்பின் காலம் செல்லச் செல்ல மறந்துவிடும் மரபு நம்மிடம் உள்ளது.

ஆகாச கங்கையும், உயிரித் திண்மம் என்ற அற்புத இயற்கை உரமும் மறக்கக் கூடியவை அல்ல. எனினும், ஒரு தனிப்பட்ட சிறு தொண்டு நிறுவனம் அரசின் ஆதரவும், விவசாயிகளின் ஆதரவும் இல்லாமல் வெற்றி பெறுமா என்பது ஐயம் என்றாலும், வெற்றி பெற வாழ்த்துவோமாக.

0 comments

Post a Comment