Pages

Tuesday, June 10, 2014

மோசடிக்கு முற்றுப்புள்ளி

பத்திரிகைகளில் ஒரு செய்தி அடிக்கடி வெளியாவதைக் கண்டிருக்கலாம். சீட்டுப் பிடிப்பது என்ற பெயரில் சிற்றூர்களிலிருந்து பெருநகரம் வரை பலர் பொதுமக்களிடமிருந்து மாதாமாதம் பணம் பெற்று மாதம் ஒருமுறை பணம் கட்டியவர்களை அழைத்து ஏலம் விட்டுக் கூடிய அளவில் கழிவு கேட்டு ஏலமெடுப்பவருக்குப் பணம் கொடுப்பது வழக்கமாகி வருகிறது. இதன் பெயர் ஏலச்சீட்டு.

இத்தகு ஏலச்சீட்டை நடத்தி வருபவர் அனைவரும் முறையான அரசின் உத்தரவாதத்தையோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியையோ பெற்றவர் அல்லர். இவ்வாறு ஏலச்சீட்டு நடத்துகிறவர்கள் பணம் சேர்த்தபின் வீட்டையே காலி செய்துவிட்டு ஓடிவிடுவதும், வாடிக்கையாளர்கள் இவர்களைத் தேடி அலைவதும் கட்டிய பணத்தைப் பெறவே முடியாமல் போவதும் அடிக்கடி நிகழுகின்றன.

மூன்று வருடச் சீட்டு என்றால், சிலர் ஒன்று அல்லது ஒன்றரை வருடம் சீட்டைக் கட்டி இடையிலேயே ஏலத்தில் சீட்டை எடுத்து உரிய தொகையை வாங்கிக் கொண்டு ஓடிவிடுவதும் சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது.

மூன்றாண்டுக்கு உரிய சீட்டை ஒன்றரை ஆண்டு அவர் கட்டியதோடு நடுவிலேயே காணாமல் போய்விடுவார். சீட்டுக் கம்பெனியை நடத்துபவர் திண்டாடுவார். சில சமயங்களில் அவரே காணாமல் போய்விடுவதும் உண்டு.

இப்படி தமிழ்நாடு முழுதும் அரசின் முன் அனுமதி இல்லாமல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பல இடங்களில் நடந்து வருகிறது. மக்களிடையே சேமிப்பு உணர்வை இந்த முறை வளர்த்தாலும், இதனால் ஏமாற்றுதான் மிகுதி.

ஒருநாள் தங்கள் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் அந்த அலுவலகத்தில் அலுவலக வாயிலில் நின்று "குய்யோ முறையோ' என்று கதறுவர். தாங்கள் பெற்ற பெண்களின் திருமணத்திற்காகவும், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காகவும் கனவு கண்டு சேர்த்த பணம் போய்விட்டதே என்று அவர்கள் அலறுவதைப் பலரும் கேட்டிருக்க முடியும்.

பணத்தை இழந்தவர்களில் சிலர் முயன்று காவல்துறைக்கு உரிய ஆதாரங்களோடு முறையிடுவர். அந்த ஆதாரங்களைப் பெற்றுக்கொண்ட காவல்துறை என்ன செய்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம். நீதிமன்றம் வரை படியேறிய அந்த வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கப்பட்டனவா? தண்டனைகள் வழங்கப் பெற்றனவா? காவல்துறையும் நீதித்துறையும்தான் விடையளிக்க வேண்டும்.

காவல்துறை, நீதித்துறை ஆகியன உயிர்ப்போடு இருக்கின்றனவா என்பதே ஐயப்படும் அளவுக்கு இத்தகு சேமிப்பு நிறுவனங்களில் அநியாயம் நடக்கிறது. பத்திரிகைகளில் இவற்றைப் பற்றிய விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஏழை மக்கள் ஏமாந்து கண்ணீர் விடும் இந்த அவலங்களை நிறுத்தவே முடியாதா? மாநிலத்திலும் தில்லி மத்திய அரசிலும் இவற்றிற்கு அனுமதி கொடுப்பதை நிறுத்திவிட முடியாதா? உறுதியாக முடியும்.

இனி இத்தகு நிதி நிறுவனங்களை நடத்த அனுமதி இல்லை என்று ஒரே வரியில் ரிசர்வ் வங்கி அறிவித்துவிட முடியும். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி முதலான ஊடகங்களிலும் விளம்பரப்படுத்திவிட முடியும்.

இப்படிப் பணம் கொடுத்து ஏமாறுவதற்குப் பதிலாக அந்தப் பணத்தைச் சேமித்துக் கொடுக்க அரசு அமைப்புகளே மேலும் எளிதாக ஊக்கப்படுத்த முடியும். அதனை ஓரளவு தற்போது உள்ள அஞ்சல் நிலைய சேமிப்பு வங்கிகள் செய்து வருகின்றன. இதனை இன்னும் எளிமைப்படுத்தலாம்.

வங்கி ஒவ்வொன்றிலும் இத்தகு சேமிப்பு முறைகளுக்கத் தற்போத இருக்கும் "ரெகரிங் டெபாசிட்' போன்ற அமைப்பைப் பொதுமக்களுக்குத் தெரியும்படியாக விளம்பரம் செய்யலாம். மாநில, மத்திய அரசுகளுக்கும், ரிசர்வ் வங்கியும் இதுபற்றி சிந்திக்க வேண்டும். காலத்தாழ்ச்சி இல்லாமல் செயல்படுத்தவும் வேண்டும்.

பின்வரும் மாற்று வழிகளை மத்திய } மாநில அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


தற்போது பொதுமக்களிடம் நடைமுறையில் இருக்கும் ஏலச்சீட்டை அரசு எல்லைக்குள் இருக்கும் வங்கியின் ஒரு பிரிவாகச் செயல்படுத்தலாம்.


வட்டி கூடுதலாகக் கொடுக்கலாம்.


தற்போது ஏலச்சீட்டு முறையில் முதிர்வு அடைந்தபிறகு பெறத்தகும் முழுத்தொகையை ஒருவர் இடையில் ஏலம் எடுத்துப் பெற்றுக்கொள்ள முடியும். இத்தகு நடைமுறை வங்கிகளில் இல்லை.

ஏலச்சீட்டை வங்கி ஏற்கும்போது இதே நடைமுறையை உரிய உத்தரவாதங்கள் பெற்றுக்கொடுக்க இயலுமா என்று பார்க்கலாம். வங்கியில் ரெக்ரிங் டெபாசிட் கட்டி வரும் ஒருவர் முதிர்வுக்கு முன்பு எடுக்க நேர்ந்தால் வங்கியில் கட்டியிருக்கும் தொகையில் குறிப்பிட்ட விழுக்காடே கடனாக எடுக்கமுடியும்.

முழுத் தொகையையும் எடுக்க வேண்டும் என்றால், அது இடைமுடிக்கப்பட்ட ரெகரிங் டெபாசிட்டாகவே கொள்ளப் பெறுகிறது. இதற்கு மாற்றுவழியைப் பற்றி அரசு சிந்திக்கலாம்.

= தற்போது மாதந்தோறும் சேமிக்க அரசு வங்கிகளில் ஏற்பாடு இருக்கிறது. இதனை நாள்தோறும் சேமிப்பு வாரம்தோறும் சேமிப்பு என்று விரிவுபடுத்தலாம்.

0 comments

Post a Comment