Pages

Thursday, May 29, 2014

தார்வாசம் வீசும் தேசிய நெடுஞ்சாலையில் தென்றல் வீசும் மரங்கள் நடப்படுமா?

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்களும் அதில் குறிப்பாக மரங்களும்  அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது.
நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழியாகும். ஆனால், நடப்பதென்னவோ தலைகீழ்தான்.

திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி வரையிலான 87 கிமீ தொலைவுக்கு இரு வழிசாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கும் முன்பு சாலையின் இரு மருங்கிலும் பல ஆயிரம் மரங்கள்  இருந்தன. சாலைப்பணிக்காக  அவற்றை வேருடன்  அப்புறப்படுத்தி பணிகள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது அத்வானி பேரவை உட்பட பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், மரங்கள் வெட்டப்படும் போது ஏற்படும் சுற்றுச் சூழல் ஆபத்து குறித்த தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதற்கு சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் இரு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்ததும் மரங்கள் நடுவதற்கும், வாகன கட்டண வசூல் மையங்கள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளுக்கான கழிப்பறைகள், உணவகங்கள் அமைக்கவும் மக்கள் மேம்பாட்டு பணிகள் செய்ய நிறுவனங்களிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தனர்.
 ஆனால் இரு வழிச்சாலை அகலப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம்  நிறைவடைந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனமும், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளும் மரங்களை நடுவதற்கும், கழிப்பறைகள், உணவகங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆனால் வாகனக்கட்டண வசூல் மட்டும் தீவிர முனைப்புடன் நடைபெறுவதையும் பார்க்க முடிகிறது.
  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவில் ஒப்பந்த நிறுவனங்களை அறிவுறுத்தி மரங்கள் நடும் பணிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அத்வானி பேரவை மாநில நிறுவனத் தலைவர் எஸ். பழனியப்பன்.
இன்றைய பருவ நிலை மாற்றத்துக்குக்கான அடிப்படைக்காரணம் பூமிப்பந்து சூடானதுதான் என்பதை உலகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு பூமியை பாதுக்காப்பதற்காக இயற்கை கொடுத்த பசுமைப் போர்வையை ஈவு இரக்கமின்றி கிழித்தெறிந்துதான் என்பதை தாமதமாக உணரத்தொடங்கியுள்ளோம். 
தற்போது மனித குலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அணு உலைகளின் கதிர் வீச்சைத்தடுக்கும் சக்தி  செஞ்சந்தன மரத்துக்கு சக்தி இருக்கிறது. அதனால்தான், ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு உள்ளது. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் வரை மதிக்கப்படுகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.
எனவே இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நம்முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற வழிமுறைகளைப் பின்பற்றி நாடெங்கும் மரம் வளர்ப்போம். குறிப்பாக தார்வாசம் வீசும் நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் தென்றல் வீசும் மரங்களை வளர்த்தெடுப்போம். சுற்றுச்சூழலை அழகு படுத்துவோம். அதை விடாது பாது காப்போம் என்றார்  மரம் தங்கசாமி. 
வீட்டு ஒரு மரம் வளர்போம் அதே போல  சாலையோரங்களிலும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதே தற்போதுள்ள தேவையாகும். இதை சம்மந்தப்பட்ட துறையினர் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

0 comments

Post a Comment