ஒருவனுடைய உண்மையான செல்வம் கல்விச் செல்வமாகும். ஏட்டில் உள்ளதைக் கற்றவன் மட்டும்தான் படிப்பாளி என்றில்லை, அனுபவப் பாடம் படித்தவனும் புத்திசாலிதான். எப்படியோ கற்றல் என்பது மனித வாழ்க்கை முழுவதும் நிகழும் ஒரு தொடர் நிகழ்வாகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறான். அப்போதுதான் வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியும்.
ஆனால், ஒரு சிலர் தங்களின் பள்ளிக் கல்விக்கு பிறகு மேற்கொண்டு படிக்க வசதியில்லாத காரணத்தாலோ அல்லது குடும்பச் சூழலாலோ, கல்லூரிக் கல்வி உள்ளிட்ட மேல்படிப்புகளை படிக்க இயலாமல் போயிருக்கலாம்.
இத்தகையோரின் கற்றல் வேட்கையைத் தணிப்பதற்காகவே தொலைதூரக் கல்வி முறை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இதேபோல் ஒருசிலர் தங்களின் லட்சியத்தை விட்டுவிட்டு, வாழ்க்கைத் தேடலுக்காக ஏதேனும் ஒரு படிப்பை முடித்துவிட்டு, ஏதேனும் ஒரு பணியில் இருப்பர். அப்படிப்பட்டவர்கள் ஓரளவுக்கு வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு, தங்களின் லட்சியப் பயணத்தைத் தொடங்க எண்ணுவர். அதற்கு சில படிப்புகளைப் படிக்க வேண்டி இருக்கும்.
சட்டம் படித்து வழக்குரைஞராவதை தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கி, ஏதோ ஒரு டிகிரி முடித்து, வணிகராகி இப்போது ஒரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதால், தனது வழக்குரைஞராகும் கனவை தொடர எண்ணி விசாரித்தால், அவருக்கு வயதாகி விட்டதால் படிக்க இயலாது எனத் தெரியவந்தது. ஆனால், அவருக்கு அப்படியொன்றும் வயதாகிவிடவில்லை. 32 வயதுதான் ஆகியிருந்தது.
ஆனால், சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருந்தால் 20 வயதுக்குள்ளும், பட்டப்படிப்பு படித்திருந்தால் 30 வயதுக்குள்ளும் இருக்கவேண்டுமென வயது வரம்பு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த வயது வரம்பு எஸ்.சி., எஸ்.டி.க்கு 22, 35 ஆக உள்ளது.
சட்டப் படிப்பும் மருத்துவம், பொறியியல் போன்றதொரு தொழில் படிப்புதான். பிளஸ் 2 முடித்தவுடன் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும். ஆனால், பொறியியலை பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள், எவ்வளவு வயதானாலும் மாலை நேரக் கல்லூரிகளில் படிக்கலாம்.
அதேபோல் சட்டப் படிப்பையும் யார் வேண்டுமானாலும், எவ்வளவு வயதாக இருந்தாலும் படிக்கலாம் என்ற நிலை முன்பு இருந்தது. மேலும், மாலைநேரக் கல்லூரிகளில் படித்து நிறைய பேர் வழக்குரைஞராக உருவாகியிருக்கிறார்கள். ஆனால், இப்போது மாலை நேரக் கல்லூரிகள் இல்லை. இதனால் பெரும்பாலானவர்களின் சட்டப்படிப்பு கனவு கானல் நீராகிப் போனது.
மேலும், திடீரென வயது வரம்பைக் கொணடுவந்து, குறிப்பிட்ட வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே சட்டம் பயிலலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாதொரு பயனும் விளையப்போவதில்லை. சட்டம் என்பது இந்திய குடிமக்கள் அனைவரும் கட்டாயமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று.
மேலும், "சட்டம் பற்றிய அறியாமையை மன்னிக்க இயலாது' என சட்ட முதுமொழி கூறுகிறது. குற்றம் செய்த ஒருவர், நீதிமன்றத்தில் "நான் செய்தது குற்றம் என எனக்குத் தெரியாது' எனக் கூற முடியாது. சட்டத்தை அவர் அறிந்து வைத்திருக்கவேண்டியது அவரது கடமையாகும்.
மேலும், நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்குகளை பைசல் செய்ய நிறைய வழக்குரைஞர்கள் தேவைதானே. மேலும், சட்டம் பற்றிய விழிப்புணர்வின்றிதான் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன. ஒருவேளை அனைவரும் சட்டம் படித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்குமானால், நாட்டில் கட்டாயமாக குற்றங்களின் அளவு குறைந்துவிடும். முடிந்தால் பள்ளி, கல்லூரிகளில்கூட சட்டத்தைப் பாடமாக்கி அனைவரும் சட்டத்தை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கலாம்.
மேலும், இந்திய அரசிலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று, கல்வி கற்கும் உரிமை. வயதைக் காரணம் காட்டி, ஒருவரின் கல்வி உரிமையை மறுப்பது தவறு. கல்வி கற்க அனைவருக்கும் உரிமையுள்ளது. அதற்கு வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது.
இதுபோன்ற இடையூறுகளை நாம் ஏற்படுத்துவதால்தான், ஏதேனும் ஒரு வடஇந்திய பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பணத்தைக் காட்டிவிட்டு, அந்தப் பக்கம்கூட போகாமலே, தேர்வை மட்டும் எழுதி (சிலர் தேர்வு எழுதாமலேகூட) தேர்ச்சி பெற்று வழக்குரைஞராகப் பதிவு செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
சட்டம் என்பது வாழ்க்கைக்கான நெறிமுறை. இந்த சட்டத்தை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தெரிந்து வைத்திருக்கும் நிலையை நாம் உருவாக்கவேண்டும். அப்போதுதான் அறிவுசார்ந்த ஒழுக்கமான குற்றமற்ற சமுதாயத்தை நம்மால் உருவாக்க இயலும்.
0 comments
Post a Comment