நாள் முழுவதும் ஓடிஓடி உழைத்துச் சலித்தவர்களுக்கு புத்துணர்வு அளிக்கக் கூடியவை சுற்றுலாத் தலங்கள். குறிப்பாக, கோடை விடுமுறையின் போது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.
உலகளாவிய அளவில் அதிக வருவாய் ஈட்டித் தருவதாகவும் சுற்றுலா உள்ளது. இந்தியாவின் அன்னியச் செலாவணியில் சுற்றுலா வருவாயின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் உதகை, கொடைக்கானல், குற்றாலம் போன்றவை. ஆனால், இவை எதுவுமே சரிவர பராமரிக்கப்படாத நகரங்களாகவே உள்ளன.
சீசன் காலத்தில் அதிலும் குறிப்பாக விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்கேற்ப எந்த ஏற்பாடுகளுமே செய்வதில்லை.
குறிப்பாக, அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட சரியில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம். சமீபத்தில் உதகைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தோம்.
நகரின் முக்கியச் சந்திப்புகளில் பாலிதீன் ஒழிப்போம் என்று பதாகைகள் வைத்துள்ளனர். ஆனால், உணவகங்களில் கொதிக்கும் சாம்பார், டீ போன்றவற்றை பாலீதீன் பைகளில் கொடுக்கின்றனர்.
அங்கிங்கெனாதபடி எங்கும் பாலிதீன் எந்தத் தடையுமின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. விளைவு நகரெங்கும் குப்பைகள், துர்நாற்றம். நகரில் எந்த இடத்திலும் குடிநீர் வசதி கிடையாது.
குளிர் பிரதேசமான உதகையில் இயற்கை உபாதைகள் தவிர்க்கவே முடியாதவை. ஆனால், மிக முக்கியமான கழிப்பறை வசதி நகரில் எங்குமே இல்லை.
உதகை ஏரியில் நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 வாங்குகிறார்கள். அதிகம் மக்கள் கூடும் அங்கு ஒரே ஒரு கட்டண கழிப்பறை உள்ளது.
அதில் வரிசையில் நின்றுதான் செல்ல வேண்டும். பராமரித்து பல நாள் ஆகியிருக்கும் என்று எண்ணும் வகையில்தான் அது உள்ளது. ஆனால், சிறுநீர் கழிக்க கட்டணமாக ரூ.5 வசூலிக்கின்றனர்.
அடுத்து தாவரவியல் பூங்கா. இதற்கு நுழைவுக் கட்டணம் நபருக்கு ரூ.30. இங்கு ரெடிமேட் கழிப்பறையை வைத்துள்ளனர். அதிலிருந்து ஒரு பர்லாங் தூரத்துக்கு நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
அடுத்து பைக்காரா அருவிப் பகுதி. வாகன நிறுத்துமிடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நுழைவுக் கட்டணமாக ரூ.5 வசூலிக்கின்றனர். அங்கும் ஒரே ஒரு கழிப்பறைதான் உள்ளது.
இதேபோன்றுதான் பார்க்கிங் கட்டணமும். வாகனங்கள் நிறுத்துவதற்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆனால், அங்கும் எந்த அடிப்படை வசதியும் இல்லை.
இதே நிலைதான் கொடைக்கானலிலும். குற்றாலத்தின் அடிப்படை வசதிகள் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கே தொடரப்பட்டுவிட்டது.
சுற்றுலாத் தலங்கள்தான் என்றில்லை. கோயில் தலங்களிலும் கழிப்பறை வசதிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இதற்கு உதாரணம் சங்கரன்
கோவில்.
அங்கு கோயிலை ஒட்டி கட்டண கழிப்பறை உள்ளது. அதன் அறிவிப்பு பலகை மட்டுமே பளபளக்கிறதே தவிர உள்ளே நிலைமை படுமோசமாக உள்ளது. இங்கும் சிறுநீர் கழிக்க ரூ.5 வசூலிக்கின்றனர்.
நம் தமிழ் நாட்டில்தான் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது. பிற மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன.
இமாசல பிரதேச சுற்றுலாத் தலமான மணாலியில் பாலிதீன் பைகளை கண்ணால் கூட பார்க்க முடியாது. கேரளத்தின் சாலக்குடி அருவிப் பகுதிக்கு குழந்தைகளின் பால் பாட்டில் கூட பிளாஸ்டிக்கில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
தமிழகத்திலும் சுற்றுலா வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தவும் பயணிகளைக் கவர்ந்து இழுக்கவும் சுற்றுலாத் துறையும் உள்ளது. ஆனால் சுற்றுலாத் தலங்கள் அந்த அளவுக்கு இருக்கின்றனவா?
ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10க்கு கிடைக்கும் தமிழகத்தில் சிறுநீர் கழிக்க ரூ.5 வசூலிப்பதும், அதைக் கொடுத்தாலும் சுத்தமின்றி இருப்பதும் வருந்தத்தக்கது.
0 comments
Post a Comment