இந்திய வனப் பாதுகாப்பு நிர்வாகத்தில் உயிர்ச்சூழல் - பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த அடர்த்தியான காடுகள் "உயிர்ச்சூழல் பாதுகாப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில், உஸ்ரீர்ப்ர்ஞ்ஹ் நங்ய்ள்ண்ற்ண்ஸ்ங் ழர்ய்ங் என்பார்கள்.
புவியியல் பரப்பில் 30 சதவீதம் வனம் இருந்தால்தான் புவி வெப்பமாதல் நிகழ்வைத் தடுக்க முடியும். இன்றைய இந்தியாவில் 20 சதவீதம் வனங்களே எஞ்சியுள்ளன. இந்த 20 சதவீதத்தில் உள்ள சில அடர்த்தியான பகுதிகளில் உயிர்ச்சூழல் - பல்லுயிர்ப் பெருக்கம் மிகுந்து விளங்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து உயிர்ச்சூழல் பாதுகாப்பு வளையம் அறிவிக்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் அங்கு வளர்ச்சிப் பணிகள் - கட்டுமானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
2005 முதல் 2009 வரையில் வனங்களின் அடர்த்தி குறைந்துள்ளது என்றும், அதேசமயம், வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டதால் வனப்பகுதி நிலப்பரப்பு குறையவில்லை என்றும், அண்மையில் வெளியிடப்பட்ட வன சர்வே அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.
1980இல் சூழல் பாதுகாப்பு, வனவாழ்வுப் புகலிடத் திட்டங்கள் இயற்றப்பட்ட பின்னர் வனச் சுரண்டல் ஓரளவுக்குக் கட்டுப்பட்டது என்றாலும் சட்டத்திற்குப் புறம்பாக அடர்த்தியான பகுதிகளில் பல கொள்ளையர்கள் அரசியல் உடன்பாட்டுடன் அடர்த்தியான பகுதிகளில் சந்தனம், செஞ்சந்தனம், தேக்கு மரங்களை வெட்டியும், புலி வேட்டை, யானை வேட்டை, சிறுத்தை வேட்டை செய்தும் வந்தனர்.
முதல் முறையாக 1980இல் வன அடர்த்தியை அறியக்கூடிய ரிமோட் சென்ஸ், வானத்திலிருந்து நிழல் படங்கள் எடுக்கப்பட்டபோது அடர்த்தியான காடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு, வன விலங்குகள் கொல்லப்பட்ட விவரங்கள் புரிந்தன. இன்றளவும் இழந்த பகுதிகளில் மர நடவு பற்றிய சிந்தனையோ, பல்லுயிர்ப் பெருக்க எண்ணமோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியாவில் அடர்த்தியான காடுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியே முதன்மையானது. இது வடக்கே குஜராத்தில் தொடங்கி தெற்கே குமரி முனை வரை நீடிக்கிறது. அதிகமான அடர்த்தி கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளடங்குகிறது.
பின்னர் வடமேற்கில் பஞ்சாபில் தொடங்கி வடகிழக்கில் அஸ்ஸாம் வரை உ.பி., பிகார், மேற்கு வங்கம் அடங்கும் இமாலய மலைக் காடுகள். மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை எடுத்துக் கொண்டால், இதில் அடங்கும் அடர்த்திப் பகுதி 1,37,000 ஹெக்டேர் என்று காட்கில் அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.
இப்பகுதி "அமைதிப் பள்ளத்தாக்கு' என்றும் அழைக்கப்படும். இதைப் பாதுகாக்க டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் உட்பட தென்னகத்தில் உள்ள அனைத்து அறிஞர்களும் சூழல் போராளிகளும் குரல் எழுப்பி வருகின்றனர்.
எனினும் அமைதிப் பள்ளத்தாக்கு இயக்கம் 1980-90 கால கட்டத்தில் கேரள அரசு அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அணைக்கட்டுத் திட்டத்தைத் தொடங்கியபோது கேரளத்து விஞ்ஞானிகளும் அறிஞர்களும் சேர்ந்து கேரள சாகித்ய பரிஷத் என்ற இயக்கத்தை நடத்தி அந்த அணைக்கட்டுத் திட்டத்தை முடக்கினர். இன்று முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டுப் புதிய அணை கட்ட திட்டமிடுகின்றனர்.
கேரள நாட்டின் ஆளும் கட்சியின் புதிய அணைக்கட்டு திட்டம் என்பது ஒப்பந்தக்காரர் நலவாழ்வுத் திட்டம் என்பதால், கேரளாவிலேயே எதிர்ப்புகள் கிளம்பிவிட்டதை கவனிக்கலாம். முல்லைப் பெரியார், தேக்கடி எல்லாம் அமைதிப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியே. கர்நாடக மாநிலத்திலும் அமைதிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்பு இயக்கத்தின் வெற்றியாக பெட்தி போராட்டம் உணர்த்தியது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சர்தார் சரோவர் நர்மதா இயக்கத்தை நடத்திய மேதா பட்கரும் அமைதிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்புக்கு ஆதரவு வழங்கினார். மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பாதுகாப்பு இயக்கம் வலுப்பெற்ற காலகட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாதவ் காட்கில் என்ற விஞ்ஞானியைத் தலைவராகக் கொண்ட குழுவை அமைத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக்குரிய யோசனைகளை வழங்கும்படி பணித்தது.
2011இல் காட்கில் கமிட்டி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதை பகிரங்கப்படுத்தாமல் முடக்கியது. கேரள மாநில ஒப்பந்தக்காரர்களின் நலவாழ்வு பாதிக்கப்படுமே என்று மைனாரிட்டி மைய அரசு அஞ்சியது.
பின்னர் காட்கில் கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டுமென்ற உச்சநீதிமன்றத் தலையீட்டை மதித்து காட்கில் கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தக்க யோசனைகள் வழங்கவும் வளர்ச்சிப் பணிகளை அனுசரித்தும் ஆலோசனைகள் வழங்க மற்றொரு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் மற்றொரு கமிட்டி நியமனமாகி, அதுவும் மறு பரிந்துரைகளை வழங்கியது.
கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கை வெளிவந்ததும் சூழல் போராளிகள் கொதித்தெழுந்தனர். ஏனெனில் காட்கில் பரிந்துரைத்த அமைதிப் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு வளையம் 1.37 லட்சம் ஹெக்டேர் குறைக்கப்பட்டு 60,000 ஹெக்டேர் அடர்ந்த காடுகள் மட்டுமே சூழல் பாதுகாப்பு வளையமாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மீதி 7,700 ஹெக்டேரின் அடர்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு திறந்த காடுகளாகிவிட்டன. ரப்பர் தோட்டம் தேயிலைத் தோட்டம் என்று விவசாயப் பகுதிகளாகியிருந்தன. அவற்றை மீட்பது எளிதல்லவே.
பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர இயலாது என்பதால் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எளிய உரிமம், கட்டுப்பாடு விதிகளை வழங்கவும் கஸ்தூரிரங்கன் அறிக்கை யோசனை கூறியிருந்தது. அதேசமயம், அடர்ந்த காடுகள் திறந்த காடுகளாக மாறிய இடத்தில் புதிய மர நடவு பற்றிய பரிசீலனை கஸ்தூரிரங்கன் கமிட்டியில் இல்லை.
தமிழ்நாட்டிலும் நீலகிரி - கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் சத்தியமங்கலம் - கர்நாடக எல்லைப் பகுதியிலும் அடர்ந்த காடுகள் திறந்த காடுகளாக மாறியுள்ளன. வெட்டப்பட்ட சந்தனம், தேக்கு, தோதகத்தி (ரோஸ் வுட்), செஞ்சந்தனம் போன்ற மதிப்புள்ள கன மரங்கள் ஈடுசெய்யப்படாத காரணத்தால் மழைக் காலங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதுண்டு. பாறை சரிந்து மனித உயிர்களுக்குப் ஆபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. காரணம், ஒரு நல்ல திட்டம் நடுவில் புறக்கணிக்கப்பட்டது.
1980களில் ராஜீவ் காந்தி பிரதமராயிருந்தபோதுதான் ரிமோட் சென்சிங் வழியே அடர்ந்த காடுகள் திறந்த காடுகளான விவரம் திரட்டப்பட்டது. உடனேயே திறந்த காடுகளை அடர்ந்த காடுகளாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உதாரணமாக, கொடைக்கானல் மலைத் தொடர்ப் பகுதியில் பழனி மலைத் தொடர்ப் பாதுகாப்புக் கழகம் நிறுவப்பட்டுக் கொடைக்கானல் மலை அடிவாரம் அடங்கும் ஆத்தூர் அணைக்கட்டு, குதிரையாறு, பாப்பம்பட்டி, கன்னிவாடி, ஒடுக்கம் ஆகிய ஊர்களில் மர விதைப் பண்ணை நிறுவப்பட்டு சுமார் 500 வகையான மரக் கன்றுகள் பற்பல லட்சங்களில் எழுப்பி அடர்த்தி இழந்த வனப் பகுதியில் நடப்பட்டன. இதற்கு ராஜீவ் காந்தி நிதி உதவி செய்தார்.
1980களில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சில்வர் ஓக் (மலைச் சவுக்கு), நெல்லரை, பென்சில், பரம்பை செவ்விலவு, பீநாஹி, ஆச்சா, ஆவி, புங்கம், வேங்கை, வேம்பு, சந்தன வேம்பு போன்ற மரங்கள் நடப்பட்டன. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின் நிதி உதவி நிறுத்தப்பட்டது. மாநில உதவியும் கிட்டவில்லை.
ராஜீவ்காந்தி காலத்தில் நடப்பட்ட மரங்களினால் ஓரளவுக்குப் பாதுகாப்பு கிட்டினாலும் வெட்டப்படும் மரங்களுக்கு நிகராக வெட்டப்பட்ட இடங்களில் மரங்கள் நடும் பணி நடப்பதில்லை. அதேசமயம், நிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மர நடவு தமிழ்நாட்டில் சிறப்பாக உள்ளது. வனத் துறை உதவியுடன் மாவட்டந்தோறும் விவசாயிகள் மர வளர்ப்பு சங்கங்களை உருவாக்கியுள்ளனர்.
குளத்து வேலைத் திட்டம் காரணமாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட சூழ்நிலையில் விவசாய நிலங்களில் மர வளர்ப்பு பெருகியுள்ளது. மரங்களை வெட்டிப் பயன்படுத்திக் கொள்வதில் உள்ள சிக்கல்களும் களையப்பட்டு விட்டதால், சந்தனம், தேக்கு, செஞ்சந்தனம், தோதகத்தி தவிர மற்றவற்றை அனுமதியில்லாமல் வெட்டி விற்கலாம். தடையுள்ள மரங்களையும் தகவல் தெரிவித்துவிட்டு விற்றுக் காசாக்கிக் கொள்ளலாம்.
"மரப் பயிரும் பணப் பயிரே' என்ற கொள்கை நிலைத்துவிட்டதால், தீப்பெட்டி, காகிதத் தொழிற்சாலை, பிளைவுட் தேவைகள் இப்போது வனப்பகுதியில் அல்ல, நிலப் பகுதிகளிலேயே நிறைவேற்றப்படுகிறது. மேற்படித் தொழில் தேவைப் பற்றாக்குறை இறக்குமதி மூலமும் நிறைவேற்றிக் கொள்ளப்படுகிறது.
2006இல் வனவாசிகள் வாழ்வுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் உதவியால் வனப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் உதவியுடன் திறந்த காடுகளை அடர்ந்த காடுகளாக மாற்றப் புதிய அரசு உதவ வேண்டும்.
காடுகளை அழித்து விவசாயமோ வளர்ச்சித் திட்டமோ ஏற்படுத்தாமல் அடர்ந்த வனங்களில் இழந்துவிட்ட மரங்களுக்கு ஈடாகப் பன்மடங்கு மரங்களை நெருக்கமாக நடவு செய்து வருங்கால தலைமுறைக்கு சுவாசம் அளிப்பதும் வெப்பமடையும் பூமியைக் குளிரச் செய்வதும் புதிய அரசின் தலையான கடமையாகும்.
0 comments
Post a Comment