Pages

Wednesday, June 11, 2014

கண்மாய் என்னும் காலன்

தமிழகத்தில் இன்னும் மழைக் காலம் தொடங்கவில்லை. அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், அந்தத் தண்ணீரில் கூட கடந்த இரு வாரங்களில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் சிக்கி பலியாவதைத் தடுக்க மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதிலாவது ஒன்றிரண்டு குழந்தைகள்தான் இறந்தன. ஆனால் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்களில் கொத்துக் கொத்தாக குழந்தைகள் இறக்கின்றனர்.
இதில் முதல் சம்பவம் நடந்த மறுநாள் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.
முந்தைய மத்திய அரசின் சாதனையாகக் கூறப்படும் முக்கிய திட்டம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்ற 100 நாள் வேலைத் திட்டம். தொடக்கத்தில் இந்த திட்டம் நல்ல திட்டமாகத்தான் தோன்றியது. ஆனால், காலம் செல்லச்செல்ல இந்த திட்டத்தின் மறுபக்கம் தெரியவந்தது.
விவசாயத் தொழிலுக்கு கூலித் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. களையெடுப்பு, கதிர் அறுப்பு போன்றவற்றுக்கு ஆள்கள் கிடைக்கவில்லை. ஒருசில பணிகளை இயந்திரங்களைக் கொண்டு செய்து விடலாம்.
ஆனால், மரக்கன்றுகளுக்கு மண் அணைப்பது, வரப்பை சீரமைப்பது போன்ற பணிகளை தொழிலாளர்களைக் கொண்டே மேற்கொள்ள முடியும். இதற்கு தொழிலாளர் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.
இது ஒருபுறம் இருக்க ஊரக வேலைத் திட்டம் சிலருக்கு பணம் கொழிக்கும் திட்டமாக மாறிப்போனது. திட்டத்தின் உண்மையான நோக்கம் போய், பெயருக்கு வேலை பார்ப்பது என்றானது. குறிப்பாக, கண்மாய்கள் தூர்வாரும் பணியில் இந்த திட்டத்தின் செயல்பாடு கவலைக்குரியது.
திட்ட விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவு தோண்டினால் குறிப்பிட்ட சம்பளம் என உள்ளது. இதற்கேற்ப கண்மாய்களில் பணிகள் நடந்தன. தண்ணீர் இல்லாத கண்மாய்களில், ஈரப்பதம் இருக்கும் இடத்தில் தோண்டினர். வரைமுறையின்றி வசதியாக இருக்கும் இடங்களில் எல்லாம் குழி வெட்டப்பட்டது. பிற்காலத்தில் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அதிகாரிகளும் கவலைப்படவில்லை, பயனாளிகளும் கவலைப்படவில்லை.
பயனாளிகளைப் பொருத்தவரை அவர்களுக்குத் தேவையான சம்பளம் கிடைத்து விட்டது. அதிகாரிகளைப் பொருத்தவரை மத்திய அரசு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை செலவழித்து விட்டோம் என்ற திருப்தி. இடையில் இருக்கும் சிலர் இந்த திட்டத்தின் மூலம் பெரிய அளவில் சம்பாதித்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்டதென்னவோ சாமானிய மக்கள்தான். ஒவ்வொரு கண்மாயிலும் தண்ணீர் தேங்கியபின் கவலையளிக்கக் கூடிய பல சம்பவங்கள் நடக்கலாம். காரணம் கண்மாயின் எந்த இடத்தில் எவ்வளவு ஆழம் உள்ளது என யாருக்குமே தெரியாது.
கிராமப்புறங்களில் கண்மாய், குளங்களில் குளிப்பது, நீச்சலடித்துப் பழகுவதும் சாதாரண விஷயம். ஆனால், ஆழம் தெரியாமல் சிக்கிக் கொள்வது மட்டுமின்றி, ஈரப்பதம் இருக்கிறது என தோண்டப்பட்ட இடங்களில் சகதி சேர்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
இது எதுவுமே தெரியாமல் தண்ணீரில் விளையாடச் செல்லும் குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாகலாம் என்றார். அவர் சொன்னபடியே அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தன.
கடந்த 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் 3 பேர் இறந்தனர். 29ஆம் தேதி கோவையில் 4 மாணவர்கள் இறந்தனர். 31ஆம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 2 பேர் இறந்தனர். அதாவது 5 நாள்களில் 15 பேர் இறந்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டபின் இதுபோன்ற மரணங்கள் இல்லை. ஆனால் வார விடுமுறையில் மீண்டும் இறப்பு துவங்கிவிட்டது. ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தர்மபுரியில் 4 குழந்தைகள் இறந்துவிட்டனர். 
இந்தச் சம்பவங்கள் அனைத்துமே ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்ட கண்மாய்களில்தான் நடந்தன என்று கூற முடியாது. ஆனால், மழைக் காலம் தொடங்கியதும் கண்மாய்களில் காலன் காத்திருக்கிறான் என்பது மட்டும் உண்மை.
மழைக் காலம் தொடங்கும் முன் கண்மாய்கள், குளங்களில் பலியாவதைத் தடுக்க விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றில் உள்ளாட்சி பிரதிநிதிகளை, குறிப்பாக ஊராட்சித் தலைவர்களைப் பங்குபெற வைத்து கிராமத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை உடனடியாகச் செய்தால் தான் மழைக் காலத்தில் பிஞ்சுகள் பலியாவதைத் தடுக்க முடியும்.

0 comments

Post a Comment