Pages

Tuesday, May 27, 2014

இடதுசாரிகளுக்கு ஏன் இந்நிலை?

இந்தியா போன்ற ஒரு துணைக்கண்டத்தில் தேர்தல் நடந்து, அமைதியான ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது மக்களாட்சியின் மிகப் பெரிய சாதனையாகும்.
மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்கான ஆட்சி என்பதை மறந்து தாங்கள் நினைத்ததை - தங்களுக்குத் தேவையானதை மக்களிடம் திணிப்பது என்று ஆட்சியை அதிகார ஆதிக்கமாக மாற்றியதற்கு மக்கள் தந்த தண்டனையே இந்தத் தேர்தல் முடிவுகள்.
தேர்தல் முடிவுகள் சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். என்றாலும் மக்களாட்சியை விரும்புகிற ஒவ்வொருவரும் இம்முடிவை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இது மக்களின் தீர்ப்பு - மகேசனின் தீர்ப்பு.
"எனது வாழ்க்கையும், பொது வாழ்வும் திறந்த புத்தகம் போன்றது என்பதைப் பல நேரங்களில் நான் வலியுறுத்தி வந்துள்ளேன். நமது நாட்டு நலனுக்கு எது சிறந்ததோ அதை எப்போதும் செய்து வந்தேன்...' என்று விடைபெறும் நேரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
"பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைவிட தற்போது நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்த வெற்றியின் பலனை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்' என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கூட்டணி அரசு விடைபெற்றுவிட்டது. புதிய பா.ஜ.க. அரசு ஆட்சியை அமைத்துள்ளது. நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.
காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற ஆட்சியை அமைப்போம் என்று புறப்பட்ட மூன்றாவது அணி எங்கே போனது என்றே தெரியவில்லை. இடதுசாரிகளின் "மாற்றுப் பாதை' அவர்களை இறுதிவரைக் கொண்டு சேர்க்கவில்லை. இடையிலேயே நிறுத்தி விட்டது.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் இடதுசாரிகள் இடம் பெற்றனர். அப்போது அந்த அரசை வழிநடத்தும் அளவுக்கு அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அப்போதுதான் குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் போன்றவை இந்தச் செயல்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே.
அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தபோது, இடதுசாரிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். அந்த எதிர்ப்பினைப் பொருள்படுத்தாமல் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட முயன்றதால் இடதுசாரிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
மன்மோகன் சிங் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தபோது, ஆட்சியதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பணபேரம் பேசப்பட்டது. ஊழல் இப்படித்தான் உருவானது.
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே காங்கிரஸ் அரசு பெரும்பான்மையைப் பெற்றதால் இடதுசாரிக் கட்சிகள் அரசியலில் முக்கியத்துவத்தை இழந்தன. ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆற்றலையும் இழந்தன.
இந்நிலையில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 2009ஆம் ஆண்டு தேர்தலில் 24 இடங்களைப் பெற்ற இடதுசாரிக் கட்சிகள் இப்போது 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. இது கடந்த கால வரலாற்றை நோக்குவோருக்குப் மிகப் பெரிய ஏமாற்றமாகும்.
இவற்றில் கேரளாவிலிருந்து 6 இடங்களும், மேற்கு வங்காளம், திரிபுராவில் இருந்து தலா இரண்டு இடங்களும் கிடைத்துள்ளன. இவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களைப் பிடித்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இடதுசாரிக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் 5.33 விழுக்காட்டிலிருந்து 3.2 விழுக்காடாகச் சரிந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 1.43 விழுக்காட்டிலிருந்து 0.8 விழுக்காடாகக் குறைந்து விட்டது. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஃபார்வர்டு பிளாக் கட்சிகள் முறையே 0.3 மற்றும் 0.2 விழுக்காடு வாக்குகளையே பெற்றுள்ளன.
இடதுசாரிக் கட்சிகளின் பெரும் வீழ்ச்சி மேற்கு வங்காளத்தில்தான் ஆரம்பம் ஆகிறது. அங்கு 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22.7 விழுக்காடும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2.3 விழுக்காடும் வாக்குகளைப் பெற்றுள்ளன.
கடந்த தேர்தலில் இங்கு 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற அக்கட்சிகள் இப்போது வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடந்த நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த பாசுதேவ் ஆச்சார்யா மற்றும் பல இடதுசாரி எம்.பி.க்கள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றனர்.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், "இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. இது உண்மை நிலையைப் பிரதிபலிக்க வில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வன்முறை மற்றும் தில்லுமுல்லு காரணமாகவே இம்முடிவு அமைந்துள்ளது' என்று விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் இந்த முறை அறிமுகப்படுத்திய "நோட்டா'வுக்கு 60 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. நோட்டா என்பதற்கு "மேற்காணும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' என்பதாகும். 21 அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட இது அதிகம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வதோதரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு அடுத்தபடி மூன்றாவது இடம் நோட்டாவுக்குப் பதிவாகியிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகாலி தளம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்த வாக்குகளை விடக் குறைவாகும்.
"மக்கள் அளித்த தீர்ப்பினை ஏற்கிறோம்' என்று தெரிவித்துள்ள இடதுசாரிகள், மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றும் உறுதி கூறியுள்ளனர்.
இடதுசாரிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள்; மக்கள் பிரச்னைகளுக்காக போராடுகிறவர்கள் என்று நம்பினார்கள். அப்படிப்பட்டவர்களை மக்கள் ஆதரிக்காமல் போனது ஏன்?
"தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு திராவிடக் கட்சிகளுமே இடதுசாரிக் கட்சிகளுடன் உறவு வைக்கத் தயாராக உள்ளன. காரணம் தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன.
ஆனால் இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் மட்டும் தர முன்வந்தார். எந்தவொரு திராவிடக் கட்சியும் முன் எப்போதும் இப்படி கூறியதில்லை...' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தமது பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தனித்து விடப்பட்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ் கட்சியும் தனித்து விடப்பட்டது. ஐந்து முனைப் போட்டியில் அவரவர் பலத்தை இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது.
இடதுசாரிக் கட்சிகளை மக்கள் ஆதரிக்கவில்லை என்று கூறுவதைவிட, இடதுசாரிகளின் தனித்தன்மையை அவர்களே காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதே சரி.
ஒவ்வொரு தேர்தலுக்கும் திராவிட இயக்கத்துடன் மாறி மாறி உறவு கொள்வதும், அவர்களின் முடிவுக்காக வாசலில் காத்துக் கிடப்பதும் மக்கள் மத்தியில் அவர்களது மரியாதையைச் சிதைத்து விட்டது.
இடதுசாரி எண்ணம் கொண்டவர்கள் அக்கட்சிகளுக்குள் இருப்பதைவிட வெளியில் இருப்பவர்களே அதிகம். அவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளும் போக்கு அண்மைக்காலமாக குறைந்து விட்டது. அதனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பது இடதுசாரிக் கட்சிகளுக்கும் பொருந்தும். ஆபத்து வரும்போது ஒன்றுபடுவது ஒருவகை; ஆபத்தை உணர்ந்து ஒன்றுபடுவது மற்றொரு வகை. இடதுசாரிகள் இதில் எந்த வகை?

0 comments

Post a Comment