Pages

Wednesday, June 11, 2014

வீழ்ந்த காங்கிரஸ் எழுந்திட...

அண்மையில் நடந்து முடிந்த பதினாறாவது மக்களவைத் தேர்தலில், 128 ஆண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் பேரியக்கம் 534 தொகுதிகளில் 44 இடங்களில் மட்டுமே வென்று, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியையும் பல அரசியல் ஆலோசகர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
இதற்கான காரணங்களை அக்கட்சி பல கோணங்களில் பல மட்டங்களிலும் ஆராய்ந்து வருகிறது. மேலெழுந்த வாரியான ஆராய்ச்சியில் புலப்படாத பல அம்சங்களில் ஒன்று மண்டல் கமிஷன் பின்னணியிலான ஜாதிய அரசியல் வட இந்தியாவில் இந்த முறை புறந்தள்ளப்பட்டு விட்டதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
மாயாவதி பெற்ற பூஜ்யம், லாலு பிரசாத் யாதவ் பெற்ற மூன்று, முலாயம் சிங் யாதவ் பெற்ற ஐந்து இடங்கள் - இந்தக் கணக்கின் பின்புலத்தில் இருப்பது மண்டல் பின்னணி உருவாக்கிய ஜாதிய அரசியலின் வீழ்ச்சியே. எந்த ஜாதியத்தையும் பின்பற்றாத பா.ஜ.க.வின் நரேந்திர மோடிக்கு அமோக வெற்றி கிடைத்திருப்பதும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் மக்களின் முடிவும் ஜாதிய அரசியலை மக்கள் புறந்தள்ளியிருக்கும் மகிழ்ச்சியான ஒரு திருப்பமே!
காங்கிரஸ் கட்சியின் வரலாறு காணாத தோல்விக்கு, அக்கட்சியின் தலைவி சோனியாவும், ராகுல் காந்தியும் பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும் அவர்களை மட்டுமே காரணமாகக் கூறி விட முடியாது. இந்தியப் பொருளாதாரத்தை சரியாக கவனிக்காமல் விட்டதும், பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகள். அதன் பலனாக விளைந்ததுதான் காங்கிரஸின் படுபாதாள வீழ்ச்சி என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பொதுமக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலைமையை காங்கிரஸ் கட்சி உருவாக்கிக் கொண்டது. "பொருளாதார நிபுணர் என்ற வகையில் ஒருவர் பிரதமராகவும், பல வழக்குரைஞர்கள் அமைச்சர்களாகவும் இருக்கும் ஒரு மந்திரி சபையை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. அதன் பலன் மக்களுடன் தொடர்புடையவர்கள் மத்திய ஆட்சியில் இல்லை என்ற நிலைமை 2009ஆம் ஆண்டு உருவாகியது' எனக் கூறுகிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ராஜேஷ்.
இதைவிடவும் மேலாக, "நம் நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் ஒரு புதிய தலைமுறையின் மக்கள் உருவாகி காங்கிரஸ் கட்சியை தோற்கடித்துள்ளனர். இந்த தலைமுறையினர் இளைஞர்கள். இவர்கள் வெறுத்தது ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களின் ஜமீந்தாரிய நடைமுறைகள் மற்றும் திறமையற்ற துதிபாடிகளை கட்சியின் உயர்மட்டங்களிலும் ஆட்சியின் முக்கிய இடங்களிலும் அமர்த்தியதுதான்' எனக் கூறுகிறார் சமூக ஆய்வாளர் சிவ் விஸ்வநாதன்.
1906ஆம் ஆண்டு அலகாபாத் நகரின் வழக்குரைஞர் மோதிலால் நேரு இங்கிலாந்தின் ஹார்ரோ பள்ளி மாணவனான தனது மகன் ஜவாஹர்லாலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "எந்த தலைக்கனமும் இல்லாமல் நான்தான் நேரு குடும்பத்தின் ஆரம்பத் தலைவன் என என்னால் சொல்லிக் கொள்ள முடியும். எனது அன்பான மகனாகிய நீ இந்தக் குடும்பத்தை மேலும் வளர்த்து வானாளாவிய புகழ் அடைய வழி செய்வாய் என நம்புகிறேன்' என குறிப்பிட்டார்.
அந்த வார்த்தைகள் எவ்வளவு தீர்க்க தரிசனமானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்திய அரசியலில் நேருவின் குடும்பம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்தியாவின் எல்லா தட்டு மக்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது மிகப் பெரிய உண்மை. அந்தக் குடும்பம் இந்தியாவின் மூன்று பிரதமர்களையும், காங்கிரஸின் ஐந்து தலைவர்களையும் உருவாக்கியது.
இந்தக் குடும்பத்தின் மீது விழுந்த மிகப்பெரிய அடிதான் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த மிகப்பெரிய தோல்வி. ஆனால் இந்தத் தோல்விக்கும் முற்காலங்களில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையான அம்சங்களை நேரு உருவாக்கியதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
1962ஆம் ஆண்டு தேர்தலின்போது நான் கல்லூரி மாணவனாக இருந்து மாணவர் காங்கிரஸிற்காக தேர்தல் வேலை செய்தேன். எனது அன்னை பள்ளிப் படிப்புகூட படிக்காதவர், 4ஆம் வகுப்பு வரை படித்த என் தந்தை மற்றும் கிராமத்தார் எல்லோருமே காங்கிரஸிற்கு ஓட்டளிக்க வேண்டும் என்று சொல்பவர்கள்.
சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும் காலம் அது. படிப்பறிவில்லாத எனது அன்னை எந்த பெட்டியில் ஓட்டுப் போட எனச் சொல்கிறாரோ அந்தப் பெட்டியில்தான் எங்கள் தெருவில் வசிக்கும் பல பெண்களும் ஓட்டு போடுவார்கள்.
அந்தக் காலத்தில் வாக்குச்சீட்டு ஒன்று வாக்காளருக்கு கொடுக்கப்படும். அதை அவர் குறிப்பிட்ட வேட்பாளருக்கான ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். அதாவது, காங்கிரஸ்காரருக்கு பச்சை கலர் பெட்டி, சுதந்திரா கட்சிக்கு சிகப்பு, சுயேச்சைக்கு வெள்ளை என்ற கலரில் பெட்டிகள் இருக்கும்.
"நீங்கள் ஏன் காங்கிரஸிற்கு வாக்களிக்கிறீர்கள்' என என் அன்னையிடம் நான் கேட்டால் அவர், "அது நேரு கட்சி அதனால்தான்' எனக் கூறுவார். நேருவைத் தவிர வேறு எந்த வடநாட்டு தலைவரையும் என் அன்னைக்குத் தெரியாது என்பதும் அரசியலின் கொள்கைகள் மற்றும் வேறு அம்சங்கள் எதுவும் அவர்களுக்குப் புரியாது என்பதும் அந்தக் காலத்து நிலைமை.
அதைவிடவும் சிறப்பு அவர் சொல்வது சரி என எடுத்துக் கொண்டு அந்த பெட்டியில் ஓட்டுப் போட பலர் தயாராக இருந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் தேசிய ஒருமைப்பாடு. நேரு என்ற ஒரு தலைவரின் பெயர் ஒருமைப்பாட்டிற்கு வழிசெய்தது என்பது இனிமையான உண்மை.
ஆனால், அந்த நிலை தலைகீழாக மாறி பல பிராந்தியக் கட்சிகளும் மக்களை பல தவறான வழிகளில் நடத்திச் செல்லும் தலைவர்களும் உருவாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் நேரு குடும்பத்தின் தலைமைக்கு கிடைத்த 2014 தேர்தல் தோல்வியை சரியாக புரிந்து கொள்ளாமல் காங்கிரஸார் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
1964ஆம் ஆண்டு நேருஜி மரணமடைந்தபோது இந்திரா காந்தி அரசியலில் இல்லை. லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேருவின் உண்மையான தொண்டர் என்ற வகையிலும், பல காங்கிரஸாரின் மனநிலைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் விடையளிக்கும் படியாகவும் இந்திரா காந்தியை தனது மந்திரிசபையில் உறுப்பினராகுமாறு அழைத்தார் சாஸ்திரி.
1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லால்பகதூர் சாஸ்திரி அகால மரணடைந்த பின் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நேருவின் மகள் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமரானார். பதவியிலிருந்தபோது ஏழை மக்களின் காவலராக தன்னை முன்நிறுத்திக் கொண்டார் இந்திரா காந்தி.
இது அவருக்கு அவரது தந்தை அளித்த பாடங்களின் பலனா அல்லது மக்களை கவரும் அரசியல் தந்திரமா என்பது விவாதத்திற்குரிய விஷயம். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன, பல மக்கள் நலவாழ்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றை விடவும் மேலாக 1970-71இல் கிழக்கு பாகிஸ்தான் பிரச்னையை கையிலெடுத்து மிகவும் திறமையாக வங்கதேச நாட்டை உருவாக்கி தனது புகழை உயர்த்திக் கொண்டார் இந்திரா காந்தி!
கண்டிப்பான நடவடிக்கைகளுக்கும் வாரிசு அரசியலுக்கும் எந்தவித தயக்கமும் காட்டாத இந்திரா, அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் தனது மகன் சஞ்சய் காந்தியை காங்கிரஸின் பொது காரியதரிசி பதவியில் அமர்த்தியும் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்தார்.
1980ஆம் ஆண்டு சஞ்சய் காந்தி விபத்தில் இறந்தபின், அதுவரை அரசியலில் தொடர்பு இல்லாத மற்றொரு மகனான ராஜீவ் காந்தியை காங்கிரஸ் கட்சிக்குள் நுழைத்தார். 1984இல் இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தபோது ராஜீவ் பிரதமரானார்.
பல விஞ்ஞான நடைமுறைகளை தொழில்களிலும், உயர்கல்வியிலும் புகுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததும், சீனாவுடன் சுமுகமான நட்புறவை ஏற்படுத்தியதும் ராஜீவ் காந்தி ஆட்சியின் சிறப்பு எனக் கூறலாம். 1991ஆம் ஆண்டில் ஈழத்து தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி. அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு பின் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக்கப்பட்டார்.
தனது கணவரும் மாமியாரும் நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள் என்ற முறையில் சோனியாவின் பேச்சு அமைந்தது. ஆனால், இந்தக் காலத்து இளைஞர்கள் மத்தியில் இவை தியாகங்களாக தெரியவில்லை. முற்காலத்தில் இந்தக் குடும்பம் நாட்டிற்கு செய்த நன்மைகளை விடவும் இன்றைய இந்தியாவிற்கு ராகுல் செய்தது என்ன என்ற வகையிலேயே எண்ண ஓட்டங்கள் உருவாகின.
இந்தியா சுதந்திரமடைந்தபின் 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை 43 வயது ராகுல் காந்தியால் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல முடியாது என மக்களில் பலர் நினைக்கிறார்கள் என்பதே காங்கிரஸின் படுதோல்விக்கு காரணம்.
மக்கள் அவ்வாறு நினைக்கும் வகையில்தான் ராகுல் காந்தியின் நடவடிக்கைகளும் இருந்தன எனலாம். மந்திரி பதவி வேண்டாம் என ஒதுங்கி இருந்தது, நாடாளுமன்றத்திற்கு நிறைய நாள்கள் வராமலிருந்தது, அரசியலில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து மக்கள் மத்தியில் வலம் வராமல் தேர்தல் நேரத்தில் மட்டும் சினிமா பாணியில் சில இடங்களில் வலம் வந்தது போன்றவை முக்கிய காரணங்கள்.
ஒரு பெரிய நவீன தொழிற்சாலையின் முதன்மை அதிகாரிபோல் பல பட்டதாரிகளை ஆலோசகர்களாக கொண்டு, ஏழை எளிய மக்கள் நிறைந்த இந்திய நாட்டின் பன்முக அரசியலை இயக்க முயற்சித்தது மிகப்பெரிய தவறு எனலாம்.
அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்ட காங்கிரûஸ ஆதரித்துப் பேச சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த ஒரு வேட்பாளருக்காக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குச் சென்று விட்டு பரம்பரை காங்கிரஸ் உறைவிடங்களான நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்ட பிரசாரங்களை ஒதுக்கியது.÷
இதுபோன்ற காரணங்களை ஆராய்ந்தபின் காங்கிரஸ் செய்ய வேண்டியது என்ன? காங்கிரஸ் இரண்டு வழிகளை ஆராய வேண்டும். ஒன்று பிரியங்காவை தீவிர அரசியலில் ஈடுபடுத்துவது. மற்றொன்று, இரண்டாம் கட்டத்தில் உண்மையான உழைப்பாளிகளான பல காங்கிரஸ் தலைவர்களை வளர்த்துவிடுவது.
இந்த இரண்டையும் செய்தால் மட்டுமே காங்கிரஸ் மீண்டும் வளர்ச்சியடைய முடியும் என்பது என்னைப் போன்ற பலரின் நம்பிக்கை!

0 comments

Post a Comment